சிலாகிப்பை சிலாகித்தல்

 

 

 

 நூல்: நறுமணத் துயரே...  நறுமணத் துயரே

ஆசிரியர்: இசை

பதிப்பகம்: விஷ்ணுபுரம் பதிப்பகம்

     மரபான நூல்களை வாசகர்களிடம் பரவலாக்குவதற்கு சில வழிகள் உள்ளன. அந்நூல்களுக்கு புதிதாக உரை எழுதுவது பெரும்பாலானவர்கள் செய்வது. அந்நூலிலுள்ள ஏதாவது ஒரு பொருண்மையை மட்டும் எடுத்துக் கொண்டு விரிவாக ஆய்வது இன்னொரு வழி.

       இவற்றிலிருந்து மாறுபட்டு  கவிஞர் இசை "நறுமணத் துயரே...  நறுமணத் துயரே" நூலில் கம்பராமாயணத்திலுள்ள காதல் பாடல்களை எடுத்துக் கொண்டு அதனை அவர் எப்படி ரசித்தார் என்பதை விவரித்துள்ளார். கவனிக்க... எப்படி ரசிக்கவேண்டும் எனக் கூறவில்லை, அவர் ரசித்ததை கூறியுள்ளார். இதுவே நவீனக் கவிஞன் செய்ய வேண்டியது எனக் கருதுகிறேன்.

     இவ்விசயத்தில் கவிஞர் இசை முதல் நபரல்ல. டி.கே.சிதம்பரநாத முதலியார் கம்பரின் பாடல்களை ஆழ்ந்து பயின்று கம்பர் இயற்றிய பாடல்கள் என தான் கருதியவற்றை மட்டும் தனியே வகைப்படுத்தி அவற்றிற்கு உரையும் எழுதியுள்ளார். வட்டத் தொட்டி என வழங்கப்பட்ட இலக்கிய சங்கம் என்ற   ஒரு அமைப்பை ஏற்படுத்தி கம்பராமாயணத்தின் அழகியலை அப்போதைய படைப்பாளரகளுடன் இணைந்து ரசித்துள்ளார். அது எண்பதாண்டுகளுக்கு முன்.  மரபென்றால் சற்று தயங்கும் தற்போதுள்ள வாசகர்களுக்கு கம்பரின் காவியத்தை அதுவும் மிகவும் ஈர்ப்பான காதல் கவிதைகளை  அறிமுகப்படுத்த முனைந்துள்ள கவிஞர் இசையின் பணி பாராட்டத்தக்கது.

         கவிஞர் இசை கம்பரின் கவிதைகளை சிலாகித்து நூல் எழுதியுள்ளார். அந்நூலை சிலாகித்து நான் எழுதுகிறேன் என்பதே சற்று வினோதமாக உள்ளது. சில அபூர்வங்கள் எப்போதும் நிகழ்வதுதானே.

    "நறுமணத் துயரே...  நறுமணத் துயரே" நூலில் ஆராயப்படுவது காவிய கர்த்தன்  கம்பரின் கவிதைகளா என மலைக்க வேண்டியதில்லை. இது, வாழ்வின் நுண்ணிய தருணங்களை பகடியும் எள்ளலும் கலந்து கவிதையாக்கும் கவிஞர் இசையின் நூலேதான்.  எப்போதும் கலகலப்பாக பழகும் வகுப்பாசிரியர் தன் மாணவர்களை அழைத்துச் சென்று கண்டிப்பான தலைமையாசிரியரின் மென்மையான குணத்தைக் காட்டுவதுபோல இசை தன்  வாசகர்களுக்கு தன் சாளரம் வழியே கம்பரின் இனிமையைக் காட்டுகிறார்.

       எளிதாக வாசிக்கும் வண்ணம்  இரண்டு பக்கங்களிலிருந்து அதிகப்பட்சம் நான்கு பக்கங்கள் வரையுள்ள 41  கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. கட்டுரைகளின் தலைப்புகள் மிகவும் ஈர்ப்புடையனவாக உள்ளன. கட்டுரையை வாசித்துவிட்டு தலைப்பை பார்க்கும்போது மனதில் ஒரு பரவசம் எழுகிறது. அடுத்தமுறை தலைப்பை சொன்னவுடனேயே கம்பரின் பாடலும் இசையின் ரசனையும் சேர்ந்தே நினைவுக்கு வந்துவிடும். உதாரணமாக "தென்றல் புலியின் உறுமல்" என்ற தலைப்பிலான கட்டுரை திருமணத்திற்கு முதல்நாள் சீதையை வருத்தும் தென்றலைப் பற்றிய பாடலை விவரிக்கிறது.

  "தென்றற் புலியே! இரை தேடுதியோ?" என முடியும் 1166 பாடலைப் பற்றி பின்வருமாறு எழுதுகிறார்;

     //பாடலில் தென்றல் புலியாகிவிடுகிறது. குளிர்வாசம் தருவதற்குப் பதிலாக அது அனலை உமிழ்கிறது. அந்த இரவின் நிலாக் கற்றைகளையே கொடிய பற்களாக்கிக்கொண்டு அது அவள் மேல் பாய்கிறது.

 உருவகம் என்பது எழுதத் தெரியாதவன் எழுதும் ஒரு வகை என்கிற எண்ணம் எப்படியோ என் மண்டைக்குள் போய்விட்டது. ஆனால் 'இந்த தென்றற் புலியை' நான் முதன்முதலாகச் சந்தித்த இரவு இன்றும் நினைவில் இருக்கிறது. அந்த இரவில் அதற்குப்  பின் உறங்க முடியவில்லை. ஒரு மகாகவி தொடுகையில் நமக்குப் பிடிக்காததெல்லாம் பிடித்துவிடுகிறது//

    நிலாக்கற்றைகளை பற்களாகக் கொண்ட தென்றலை தரிசித்த அதிர்ச்சியில் சில கணங்கள் என் உள்ளம் துடிப்பை நிறுத்தியது.

   சில கட்டுரைகளின் தலைப்பே சிலிர்பை ஏற்படுத்துகின்றன. "மதிக்கொழுந்தின் எரி நெருப்பு" "ஆவி ஒழியினும் ஆசை ஒழியா" "தூய காமுகி" "புண் திறந்து எரி நுழைந்த கதை" "பாவம் அழுது பார்த்ததுண்டோ" வாசித்தும் சில நிமிடங்கள் என்னை திகைக்க வைத்த இந்த தலைப்புகளை வாசித்துவிட்டு வெறுமனே கடப்பவருக்கு இரும்பு நெஞ்சம் படைத்தவர் என்ற விருது கொடுத்துவிடலாம்.

    நான் ஏற்கனவே இம்பர்வாரி குழும நண்பர்களுடன் சேர்ந்து கம்பராமாயணத்தை வாசித்து ருசித்தபோதும் இசையின் ரசிப்பை அறிவதற்காகவே இந்நூலை வாசித்தேன். ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ள கம்பனின் கவிதைகளுக்கும் உரைக்கு வெளியே கவிஞர் இசை உதிர்க்கும் அவதானிப்புகளும் கருத்துகளும் அவரது கவிதைகள் அளவிற்கே மிளிர்கின்றன. அவற்றை தனியே குறிக்க முயன்றேன். பொதுவாக நூலில் கிறுக்கக்கூடாது என்ற எண்ணம் கொண்ட நான் எல்லாப் பக்கங்களிலும் குறிக்கும்படி ஆகிவிட்டது. உதாரணமாக ஒன்றிரண்டு;

 // முனிவர்கள் காமன் கைவில்லுக்குக் கூட கலங்க மாட்டார்கள் என்பது ஒரு கட்டுக்கதை. இந்தக் கொடியில் பூக்கொய்யும் பாவையின் புருவவில் போதும், அதன் கடைப்பகுதியே கூடப் போதுமே! 

ஒருவன் பூக்கொய்ய புன்னை மரத்தின் உச்சிக்கு ஏறுகிறான். அவ்வளவு உச்சிக்கு ஏறுபவன் உண்மையில் சூரன் தானே? நிச்சயம் சூரன்தான். ஆனால் அவ்வளவு உயரம் போனவனின் மனம் மேல் ஒருத்தி ஏறி உள்ளாளே அவள் எவ்வளவு பெரிய சூராதி சூரி//

// சிந்தை நோய்' முற்றியவர்க்கு, சீலம் அற்றவர்க்கு மரணம்தான் மருந்தோ?//

// காதலின் முன் அறிவுரைகள் மொழிவது, பெரும்பாலும் வெறுமனே வாய் அசைப்பதுதான். வீடணன் காதலைத் திருத்த தன் கடைசி மூச்சு வரை போராடுகிறான். அது திருந்தாத ஜென்மம் அன்றோ? காதல் விதியின் தூதன்றோ?//

// "பித்தரும் இறை பொறுக்காத பேர் அபிமானம்" என்கிறான் கவி. அதாவது பித்தர்களால் கூடக் காதலை, அதன் பிரிவைப் பொறுத்துக்கொள்ள இயலாதாம்.

சிலர் பித்தரென்று ஆவதே பேர் அபிமானத்தால்தானே கவிஞரே?//

   இந்நூலில் இவைதான் ஆகச் சிறந்தது என்றில்லை. நூலில் குறித்தவற்றை கைப்போக்கில் எடுத்தது.

     கம்பரின் காதல் கவிதைகள் என்ற தலைப்பென்றவுடன் ராமன் சீதையின் பாடல்கள் மட்டுமென எண்ணிவிட வாய்ப்புள்ளது. ஆனால், இராவணன், சூர்ப்பனகை, அயோமுகி, வீரர்கள், மிதிலை நாட்டுப் பெண்கள் என அனைவரின் பாடல்களும் இடம் பெற்றிருக்கிறது. இதுவே நூலின் சிறப்பம்சம் ஆகும். மேலும், பிற காதல்கள் என்ற தலைப்பில் விலங்குகள் பறவைகளின் காதல் பாடல்களும் இடம் பெற்றிருக்கின்றன.

   "பிற காதல்கள்" கட்டுரையில் கம்பரின் 4175 பாடலைப் பற்றி கவிஞர் இசை எழுதுகிறார்

// பாம்பொன்று தன் இணையெனக் கருதி, வெண்காந்தள் செடியின் தண்டினைத் தழுவிக்கொண்டு கிடக்கிறதாம். தானுமே அக்காதலில் திளைப்பது போன்று அச்செடியும் பாம்பை இறுகத் தழுவி பின்னிக்கொள்கிறதாம்.

மரங்களுக்கு உயிர் இருக்கிறதெனில் காதலும் இருக்கும் தானே?//

இராவணன், சூர்ப்பனகை, அயோமுகி போன்றவர்களின் பாடல்களுக்கு கவிஞர் இசை அளிக்கும் ரசனைக் குறிப்பை எல்லாம் குறிப்பிட கை பரபரக்கிறது. நூலில் வாசிக்கும்போது கிடைக்கும் இன்பத்தை குலைக்கக்கூடாது என்பதற்காக தவிர்க்கிறேன்.

    இராமனும் சீதையும் கண்ணோடு கண் இணை கவ்வி முதல்முறை சந்திப்பதிலிருந்து, பெரும்போர் முடிந்து சீதை தாமரை மலருள் புகுவதுபோல நெருப்புள் சென்று நெருப்புக் கடவுள் இவள் கற்பின் அனலைத் தாங்க முடியாது அலருவது வரை தேர்ந்தெடுத்த பாடல்கள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. எனவே, வாசிப்பவர் இராமாயணத்தை வேறொரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் கண்டுவிட முடியும்.

   மரபிலக்கியங்களை வியந்துகொண்டே வாசிப்பதற்கு இந்நூல் சிறப்பான வழிகாட்டியாக விளங்குகிறது. கவிஞர் இசைக்கு நன்றியும் வாழ்த்தும்.

   என்றாலும் இரண்டு விசயங்களை கூறத் தோன்றுகிறது. "இரண்டு உடல்கள்" என்ற கட்டுரையில், தமிழ் இலக்கியத்தில் ஊர்மிளா பாத்திரத்தை கவிஞர் இசை அறிந்த வரையில் அன்பாதவன் மற்றும் லாவண்யா சுந்தர்ராஜன் இருவர் மட்டுமே அவர்களது புனைவுகளில் கையாண்டிருப்பதாக கூறியுள்ளார். இவ்விசயத்தில் "சீதையின் கிளிகள்" என்ற சிறுகதையில் ஊர்மிளா பாத்திரத்தை நானும் புனைந்துள்ளேன் என்பதை அடக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

  இரண்டாவதாக, இந்நூலை வாசித்தவுடன் கம்பராமாயணத்தை நோக்கி வாசகன் செல்வான் என இசை உத்தேசித்திருப்பாரா எனத் தெரியவில்லை. அப்படி உத்தேசித்திருந்தால் அது நடப்பதற்கு வாய்ப்பு மிகக் குறைவு என்றே கருதுகிறேன். இப்படி ஒரு நூலை வாசித்தவன் கவிஞர் இசையின் மற்ற நூல்களை வாசிக்கவே ஆவலுடன் செல்வான் என்றே நான் நம்புகிறேன்.

   முத்தாய்ப்பாக, சீதை தீக்குளித்து தன் கற்பை நிரூபித்த பின் கண்ணீர் வடிக்காத ராமனை எண்ணி கவிஞர் இசை கூறும் வரிகளுடன் முடிக்கிறேன்; 

// எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா என்பது எனக்கே இதுவரை தெளிவாகத் தெரியவில்லை? என்னைப் பார்த்தால் கற்பை, நெறிகளை தொழுது வணங்குபவன் போலவும் தெரிய வில்லை? பெண்மையைப் போற்றும் உத்தமனா இவன் என்பதிலும் உறுதியில்லை? ஆனாலும் இவ்வளவு கண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று யோசித்தால், விடை 'தமிழ்' என்றே கிடைக்கிறது.

தமிழ்தான் என் இரும்பைக் கரைக்கிறது. பரிவைச் சுரக்கிறது. அழுக்கைத் துடைக்கிறது. கண்ணீர் அங்கிருந்து தான் வருகிறது என்று நினைக்கிறேன். தமிழ் என்னை மானுடன் ஆக்குகிறது. கொஞ்ச நேரத்திற்கேனும் என்னை குணசீலன் என்றே ஆக்கிவிடுகிறது//

இதை வாசித்தபோது என் உள்ளமும் "ஆமாம்... ஆமாம்..." என்று முழங்கியது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

களிறன்ன நறுமாமலர்

ஆழ்ந்ததால் திரண்டவை

கோர்க்கப்பட்ட பட்டயங்கள்