ஆழ்ந்ததால் திரண்டவை

தீ நின்ற பாதம் 

 

நூல் : தீ நின்ற பாதம்

ஆசிரியர் : சம்யுக்தா மாயா

பதிப்பகம் : சால்ட்

             *****

சமூகம் அனைவரும் சராசரிகளாக இருப்பதையே விரும்புகிறது. சராசரியாக இருக்கத் தூண்டுகிறது. சராசரியாக இருப்பதென்பது எந்த ஒன்றிலும் ஆழ்ந்துவிடாமல் எல்லாவற்றையும் மேலோட்டமாக நுனிப்புல் மேய்வதைப்போல அறிந்துகொள்வதும், எல்லாமே எனக்குத் தெரியும் என்ற ஆணவத்துடன் இருப்பதுமாகும். எனக்குத் தெரியாத விசயமே கிடையாது என்று பெருமையாகச் சொல்வதில் மனிதர்கள் பேரின்பம் அடைகிறார்கள்.

   இதற்கு எதிர்மாறாக கலை இலக்கியச் செயல்பாடுகள் என்பது எந்த ஒன்றிலும் ஆழ்ந்து ஈடுபடுவதைக் கோருகிறது. எந்த அளவிற்கு ஆழ்கிறோமோ அந்த அளவிற்கு அதன் வெளிப்பாட்டின் தன்மை இருக்கும். படைப்பவர்கள் மட்டுமல்லாமல் அதனை துய்ப்பவர்களும் கலையில் ஆழ்ந்து ஈடுபட்டால் மட்டுமே படைப்பாளி செல்லும் ஆழத்தை அணுக்கமாகத் தொடர்ந்து படைப்பை மெய்யாக உணரமுடியும். 

   கவிஞர் சம்யுக்தா மாயா மிக ஆழ்ந்து செல்லக்கூடியவர் எனக் கருதுகிறேன். அவரது இருவேறு களங்களான காதல் கவிதைகளும்  காசி கவிதைகளும் அதை உணர்த்துகின்றன. இத்தனை தீவிரமான கவிதைகளை தனக்குள் ஆழ்ந்து சென்றிருந்தால் மட்டுமே எழுதியிருக்க முடியும். 

  முதலில் காதல் கவிதைகள்.

 "அடைந்திட முடியாத காதலை

ஒரு வசீகர மலரென சூடிக்கொள்கிறேன்

அது காய்கிறதுமில்லை உதிர்கிறதுமில்லை"

   அடைந்துவிட்ட எதுவும் சலிக்கும் திகட்டும். பின் அதைக் கடந்துபோகத் தொடங்குவோம். அடைய முடியாத ஒன்று  தன் வசீகரத்தை எப்போதும் இழப்பதில்லை. இன்னும் இன்னும் பொலிவு பெற்று திகழ்ந்தபடியே காயாமல் உதிராமல் நீடித்திருக்கும். அந்த வசீகரம் என்றுமே தீராதது.

"தேவாலயத்தில் மண்டியிட்டு

இறைஞ்சுகிறாள் காதலுக்காக

மெழுகுவர்த்திகளும் ஒற்றை வயலினும்

மெல்ல கசிகின்றன"

 

   மண்டியிட்டு இறைஞ்சும் சொற்கள் இறைவனை அடைகிறதா என்பதை நம்மால் அறியமுடியாது. ஆனால் மெழுகுவர்த்தியும் வயலினும் உருகுவதை காணமுடிகிறது. அவை இந்தப் பிரார்த்தனையைக் கேட்ட இறைவனின் சார்பாக உள்ளம் கசிகின்றன என்று கொண்டால் மனதிற்கு எத்தனை இதமாக உள்ளது. அல்லது இறைவன் கேட்கவில்லையாயின் என்ன மெழுகுவர்த்தியும் வயலினுமாவது கசிகின்றனவே...

   //உனக்கென வாங்க எண்ணி

வாங்காமலிருந்த மலர்களை

கையில் வைத்திருந்தேன்

.......

 நல்ல வேளை ஒரு சிறு புன்னகையுடன் நீ அந்த பிரத்தியேக மலர்களை கண்டு கொண்டாய்

வாங்கி வந்திருந்தால்

அவை உனக்கானதாய் மட்டுமல்லாமல் எல்லோருக்குமானதாய் ஆகியிருக்கும்//

   வாங்க நினைத்து வாங்காமல் வந்த மலர்களை கண்டுணர்ந்து புன்னகையுடன் வாங்கி மகிழ்வதல்லவா மெய்யான நேசம். வெளியே சொல்லாத நம் உள்ளத்தை உணர்பவன் அல்லவா நேசத்திற்குரியவன். உள்ளத்துடிப்பின் மொழியை அறியும் காதலனை அடைவதன்றோ பெரும்பேறு.

 

  வாங்கி வந்திருந்தால் என்னவாயிருக்கும். அவற்றைத்தான் விழியுள்ள அனைவராலும் காணமுடியுமே. அதில் தனித்துவம் என்று ஏதுமில்லாமல் ஆகிவிடுகிறதே.

   //எதிரே இருக்கையில் கூட உன் கண்கள் என்னை சந்திப்பதே இல்லை

 நீ என்னிடம் பேசும் சொற்கள் வேறு எவரையோ நோக்கியபடிதான்

 சொல்லப் படுகின்றன

காற்றின் திசை மாறும் வேகத்தில்

சிதறி விழும் ஒரு துளி மழைக்காக

வாய் விரிக்கும் சாதகப் பட்சியென

மிகுந்த பொறுமையுடன் காத்திருக்கிறேன்

நீ கவனமின்றி தவற விடும்

சிறு பார்வைக்காக//

 

   விழிகளைப் பார்த்துப் பேசாததால் நேசமில்லையென அர்த்தம் இல்லை. காதலைத் தவிரவும் கடமைகளுண்டு. அந்த அவசரத்தில் இதை உணர்வதில்லை. அதனால் ஒடுங்கியிருக்கும் உயிர் துளிர்க்க ஒரு சிறு பார்வை போதும். அந்தப் பார்வைக்கென காத்திருப்பதும் ஒரு இன்பம்தான். சிறு மழைத்துளிக்காக வாய் விரித்து காத்திருக்கும் சாதகப் பறவை என்ற உவமை சிறப்பாக உள்ளது.

    // உன் பிரிவை எதிர்நோக்குவது எவ்வளவு பதைபதைப்பு எவ்வளவு அஞ்சுதல் எவ்வளவு கையறுநிலை என்பதை எப்படி சொல்வது?

பேய்மழைக்கு ஒதுங்கிய இருட்குகையினுள் பசும்பழுப்பு நிறத்தில் ஒளிரும் கொடிய விலங்கொன்றின் கண்களை காண்பது போல் என்றா?//

      தாங்க முடியாத மழைக்கு குகையினுள் நுழைந்தால் அந்த இருளுக்குள் ஒளிர்கிறது கொடிய விலங்கொன்றின்  பசும்பழுப்பு நிறக் கண்கள். அதை எதிர்கொள்ளும்போது ஏற்படும் பதைபதைப்பை வார்த்தைகளால் விவரித்துவிட முடியுமா. காதலைப் பற்றி உணராதவர்களுக்கு அதன் பிரிவை புரிய வைக்க இதைவிடவும் பொருத்தமான படிமம் கிடைக்குமா.

விடாத மழை, அடைமழை, கனமழை என்று சொல்லாமல் பேய்மழை என்று கூறப்பட்டுள்ளது.   என்னவென்று அறியமுடியாத கணிக்கமுடியாத முக்கியமாக நம்பமுடியாத ஒன்றைக் குறிக்கும் பேய் என்ற சொல்லே இந்தக் கவிதையின் கனத்தைக் கூட்டுகிறது. 

  //முன்பொரு காலத்தில்

ஒரு காதல் இருந்தது

அது இருவருக்கிடையில் இருந்தது

பின்பு

இருவருக்கான காதலின்

மொத்த பொறுப்பும்

அதில் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது

அந்த சிற்றெரும்பு தூக்கிச் செல்லும்

அதன் ஆயுளுக்கான

வெல்லத் துண்டு

அதன் முதுகை

ஒடித்துக் கொண்டிருக்கிறது//

    இக்கவிதை, தனிப்பட்ட ஒருவருக்கானதாக இல்லாமல் ஒட்டுமொத்த காதலர்களுக்கான அல்லது தம்பதியர்களுக்கானதாக உள்ளது. காதலும் அன்பும் இனிமையானதுதான்.  பரிமாறிக்கொள்ளும்போது அதன் சுவை கூடும், அந்த இனிமை நீடிக்கும். ஏதோவொரு நிலையில், பொறுப்பென எதையோ  காரணம் காட்டி ஒருவர் பரிமாறுதலை மறந்து விடுகிறார். உறவு நீடிக்கவென இருவருக்கான அன்பை ஒருவரே தூக்கிச் சுமக்கும் நிலை ஏற்படுகிறது. தன் இல்லத்தை முதுகில் சுமக்கும் நத்தைபோல இறக்கி வைத்திடாமல் அன்பைச் சுமக்கவேண்டும். இனிமைதான் என்றாலும் கனக்கத்தானே செய்யும். முதுகெலும்பு விரிசல் விட்டாலும் அன்பை துறந்துவிடாமல் சுமந்து செல்பவர்களால் அல்லவா இப்பூவுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்பைச் சுமக்கும் அத்தனை பேருக்கும் கரம்கூப்பிய வணக்கங்கள். இக்கவிதையை எழுதிய சம்யுக்தா மாயாவிற்கும்.

     சம்யுக்தா மாயாவை மற்ற இளங்கவிஞர்களிடமிருந்து தனித்துக் காட்டுவது இவரின் "காசி" கவிதைகள்தான். மாயம் போன்ற காதலிலிருந்து தாவி எதிர்திசையான மெய்யியலைப் பேசும் கவிதைகள் இவை.

  காசி நகரம் முழுவதுமாக செவ்வண்ணத்தில் திகழ்கிறது. செந்நிறத்தை செவியால் கேட்டு அதை வெம்மையென உணர்ந்து நதிக்குள் நின்று கூவுகிறான் வயதடைந்த அந்தகனொருவன்.

      //ஏ.... பாகீரதி...!

  இந்த ஸ்ரவண மாதத்தில்

உன் கரைகளில் நிற்கும் தீக்கொன்றை மரங்களையும் ருது கொள்ள செய்து விடாதே ஏற்கனவே தாள முடியவில்லை இந்த நகரின் வெம்மையை....! என. ..//

  ஏற்கனவே தாங்க முடியாத அனலுக்குமேல் தீக்கொன்றையின் செந்தழல் போன்ற மலர்கள் சேர்ந்தால் மொத்த ஊரும் கொதித்து உருகிவிடக் கூடும் என அஞ்சுகிறான் அந்த அந்தகன். இந்தக் கற்பனை ஆன்மீகவாதிக்கு தோன்றும் வாய்ப்புகள் குறைவு. ஒரு கவிஞரால் மட்டுமே காணக்கூடிய காட்சி. வாசித்தபோது ஒருகணம் கங்கையே செந்தழல் நுரைக்க எரிமலைக் குழம்பாக ஓடுவதான காட்சி தோன்றி உடல் சிலிர்த்தது.

    காசி பற்றிய கவிதைகளை வாசித்தபோது காரைக்கால் அம்மையாருடன் ஒப்பிடலாமா என்று தோன்றிய எண்ணத்தை அடக்கிக் கொண்டிருந்தேன். மணிகர்ணிகா - 2 கவிதையை வாசித்தவுடன் சம்யுக்தா மாயாவும் காரைக்கால் அம்மையாரின் வாரிசுதான் என மனம் ஒப்புக்கொண்டது.

//நான் ஆகிவிட்ட சவம்

நீ ஆகப்போகும் சவம்

 இடையில் நிற்கும் காலமெனும் மாயத்திரையை

கண்ணீர் துடைத்து கடந்து பார்//

 

//ஒழுகிக் கொண்டேயிருக்கும் உன்னுடைய ஓட்டைப் பாத்திரத்திலும்

மிஞ்சப் போவதில்லை

அந்த கடைசி ஒரு துளியும்.//

 

//வற்றவே வற்றாது பிறவியெனும் பேராறு

பெருங்கடலொன்றில் கலந்து - பின்

 ஆகும் வேறு வெறு ஆறுகளாய்//

   இந்த இளம் வயதில் வாழ்க்கையின் இத்தனை தத்துவார்த்ததை உணர்ந்திருக்கிறாரே என வியப்பு தோன்றியது. யாரோ சொன்னதையோ எழுதியதை வாசித்தோ இவற்றை எழுதிவிட முடியாது. தனக்குள் ஆழ்ந்து அலைந்திருந்தால் மட்டுமே இவற்றை உணர்ந்திருக்க முடியும் என்றே நம்புகிறேன்.

  காசி கவிதைகள் ஒவ்வொன்றும் மிக ஆழமானவை. அவரவர் அனுபவத்திற்கேற்ப பொருள் அளிக்கக் கூடியவை. எனவே பிறவற்றைக் கூறாமல் நிறைவுக்குச் செல்கிறேன்.

//இந்த விளக்கின் நுனியில் நின்று எரிந்திருக்கிறேன் எண்ணற்ற முறைகள்

தொடர்ந்து எண்ணெய் ஊற்றி... திரியை மட்டும்

திரும்ப திரும்ப மாற்றி... ஒவ்வொரு முறையும்

 எரியும் சுடர்

 ஒன்றே தானா....?

வேறு... வேறா...? //

 

  தீ நின்ற பாதம் நூலின் நிறைவுக் கவிதை இது. மனதினில் எப்போதும் நீங்காத வினாவை எழுப்பும் இக்கவிதையை நிறைவான ஒன்றெனக் கூறலாம். ஆனால் அலைக்கழிவை ஏற்படுத்தும் நிறைவு.  இன்னும் எத்தனை பிறவிகள் உண்டோ, இது எத்தனையாவதோ. நிறைவென ஒன்றுண்டா.. திரும்பத் திரும்ப எரிந்து கொண்டிருப்பதுதான் ஊழா. யாரால் விடையளிக்க முடியும். அந்த மாபெரும் முழுமுதல்வனால்... அல்லது அவனாலும் முடியாது.

 எப்போதும் மறக்க முடியாத கவிதைகளை படைத்துள்ளதால் விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது 2026 பெறும் சம்யுக்தா மாயாவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

களிறன்ன நறுமாமலர்

கோர்க்கப்பட்ட பட்டயங்கள்