கோர்க்கப்பட்ட பட்டயங்கள்
'கொடை மடம்’ தமிழில் கவிதை, சிறுகதை எழுதுபவர்களில் ஒருவரான எழுத்தாளர் சாம்ராஜ் அவர்களின் முதல் நாவல். வித்தியாசமான வடிவம் கொண்ட நாவல் இது. அத்தியாயங்கள், உபகதைகள் என இரு சரடாக இந்நாவல் பகுக்கப்பட்டுள்ளது. அத்தியாயங்களாக உள்ளவை முகுந்தன் மற்றும் ஜென்னி இருவருக்குமான காதலைக் கூறுவதாகவும் உபகதைகள் பல்வேறு அமைப்புகளாகச் சிதறுண்ட மார்க்சிய லெனிய (மா.லெ) அமைப்புகளில் இயங்கிய, ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத வெவ்வேறு மனிதர்களின் வாழ்வினைக் கூறுவதாகவும் அமைந்துள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் முகுந்தன்-ஜென்னி இடையிலான கதை எளிமையான காதல் கதை போல தோற்றம் கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் உபகதைகளில் கூறப்படும் வாழ்வின் தீவிரத் தன்மைதான். ஆனால், உண்மையில் எளிமையென எண்ணச் செய்யும் முகுந்தனின் வாழ்வும் அதேயளவு கடினமானதுதான். பெரு நிறுவனங்கள் தங்கள் பொருட்களுக்கான விற்பனை வாய்ப்புகளை அறிவதற்காக முகவர்களை அமர்த்துகிறார்கள். அவர்கள் குறைந்தபட்சம் நாற்பது வினாக்கள் அடங்கிய தாளை (கொஸ்டினர்) தங்கள் பிரதிநிதிகளிடம் கொடுத்து மக்களிடம் அனுப்பி பதில் பெறுகிறார்கள். அவர்கள் அளிக்கும் பதில்களைக் கொண்டு மக்களின...