இருமை
இருமை (சிறுகதை) விமான நிலையத்தில் காத்திருந்த என்னைப் பார்த்தவுடன் வேலன் கள்ளிப் பூவென சில்லென்று சிரித்தான். அந்தக் கபடமற்ற சிரிப்பும் ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும் நான் அந்த விபரத்தை உடனே கூறியதற்கு. சிங்கப்பூரிலிருந்து வந்த அவன் கொண்டு வந்த இரு பெட்டிகளையும் ஆளுக்கொன்றாய் தூக்கிக் கொண்டு திரிசூலம் ரயில் நிலையத்திற்கு சென்றோம். அது இரண்டாயிரமாவது ஆண்டு. வாடகை வண்டிகளெல்லாம் இப்போதளவிற்கு இல்லை. நான் வில்லிவாக்கத்திலிருந்து டி.வி.எஸ் எக்செல் வண்டியில் சென்று நுங்கம்பாக்கத்தில் நிறுத்திவிட்டு இரண்டு ரிடர்ன் சீட்டு வாங்கிக் கொண்டு திரிசூலம் சென்றிருந்தேன். நடைமேடையில் காலியாகயிருந்த இருக்கையில் பெட்ட...