மாயன் (சிறுகதை)
காலையில் ஐந்தரை மணிக்கு வண்டியிலேறி அமரும்போது உள்ளே இருளாகவே இருக்கும். முதல் பலகையில் அமர்பவர்கள் தூங்கிக்கொண்டு வருவார்கள். அடுத்தடுத்த பலகைகளில் அமர்பவர்கள் தூக்கம் வரவில்லை என்றாலும் கண்களை மூடியபடியே வருவார்கள். திறந்திருந்தாலும் இருட்டையே நோக்க வேண்டுமென்பதால். இதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பரமன் இங்கே வரும்வரைதான். பரமன் வந்த முதல்நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. காலையில் செல்லும்போது என்ன நடக்கிறதென்பதை கவனித்திருப்பான்போல. நாங்கள் பணிபுரிந்தது கப்பல் கட்டும் தளத்தில் சார் ஒப்பந்ததார நிறுவனத்தில். புதிதாகக் கட்டப்படும் கப்பல்களில் பைப்கள் பொருத்தும் பணி மட்டும் எங்கள் நிறுவனத்தின் பொறுப்பு. முதல் நாள் என்பதால் அன்று அவனுக்கு எந்த வேலையும் கொடுக்கவில்லை. என்ன பணி நடைபெறுகிறது என்பதை மட்டும் கவனித்தான். மாலையில் வண்டி வந்தவுடன் முதலில் ஏறாமல் கடைசியாக ஏறிய பரமன், பலகையில் அமராமல் பின்னால் சாத்திய கதவில் முதுகைச் சாய்த்து கால் நீட்டியபடி தளத்தில் அமர்ந்தான். பின்கதவை கையால் தட்டினான். சத்தம் கேட்டவுடன் வண்டி கிளம்பியது. எல்லோரும் ஏறியவுடன் அப்படித் தட்டுவத...