பழமையிலூறி ஒளிரும் சொற்கள்
நூல்: காதலூறிக் கனியும் காழ்வை ஆசிரியர்: மித்ரா அழகுவேல் பதிப்பகம்: வாசகசாலை இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சங்கப் பாடல்களிலேயே காதல் கவிதைகள் உள்ளன. அந்தக் கவிதைகளை இப்போது வாசிக்கும்போதும் அவற்றில் ஏதோவொன்று புதுமையாக புதிதாக தென்படுகிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் பழமையடையாமல் இருப்பது எழுதப்பட்டுள்ள மரபின் சிறப்பு. பெயர் சுட்டாமல், உவமை மற்றும் படிமங்களாலேயே விவரித்து, உணர்வுநிலைக்குள் ஆட்படாமல் விலகி நிற்கும் பாவனையில் எழுதப்பட்டுள்ளதே அவற்றின் புதுமைத் தன்மை நீடிப்பதற்கான காரணம் என நான் கருதுகிறேன். சங்கப் பாடல்களுக்குப் பிறகு இன்றுவரை காதல் கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மனித உணர்வுகள் என்பவை ஒவ்வொருவருக்கும் தனித்தனியானவை. பிரத்யேகமானவை. அந்த உணர்வுகளை சொற்களால் முழுமையாக சொல்லிட முடியாததால்தான் மீளமீள வெவ்வேறு சொற்களால் சொல்ல முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆவலும் தீர்வதில்லை. சொல்லியும் முடிவதில்லை. இது எப்போதும் தீராது நிகழ்ந்து கொண்டிருக்கும் விளையாடல். பெண்கள் தீவிரமான...