சீதையின் கிளிகள்

 


   

 

 

மகிழினிநகையினி  என்று சீதையால் பெயரிடப்பட்ட கிளிகள் தங்கள்  பிள்ளைகளுடன் கொய்யா பழங்களை கொறித்துக் கொண்டிருப்பதை நோக்கியபடி அமர்ந்திருந்தாள் ஊர்மிளா. நேற்றிலிருந்து அவை தன்னைப்போலவே பெரும் உவகையுடன் இருப்பதை உணர்ந்தாள். பொன் முகடுகளுடன் அமைக்கப்பட்ட ஏழடுக்கு வெண்ணிற மாளிகையை ஒட்டி அமைந்துள்ள சோலையில் அமர்ந்திருந்தாள்.  சரயுவிலிருந்து வழியமைத்து  இச்சோலைக்குள் படர்ந்து செல்லுமாறு சிற்றாறு ஒன்றை உருவாக்கியிருந்தார்கள். தெள்ளிய நீருக்கடியில் கிடந்த கூழாங்கற்கள் வெண்ணிறத்திலும் செம்பொன் நிறத்திலும் ஒளிர்ந்தன. வெவ்வேறு விதமான சிறிய மீன்கள் குழுக்களாக சுற்றியபடி நீரோடு நகர்ந்தன.  

                   மரங்களில் இருந்த பறவைகளின் குரலிலும் மகிழ்ச்சி தெரிந்தது. புற்களின் மீது நடந்தும் குதித்தும் புழுக்களை விழுங்கிய   நாகணவாய்களிடமும் சிறு  துள்ளல் தெரிந்தது. எப்போதும் ஒருவித மனக்கிலேசத்தை ஏற்படுத்தும் நகரத்தின் இயங்கு ஓசை தற்போது இசை போன்று ஒலித்தது.

        பதினான்கு ஆண்டு நீண்ட காத்திருப்பு முடியப் போகிறது என்ற விடுதலை உணர்வு தோன்றியபோதே மனதில் பெரும் வெற்றிடம் ஒன்றும் தோன்றியதை ஆச்சர்யத்துடன்   நோக்கினாள். இனிமேல் வாழப்போகும் வாழ்க்கைக்கு ஏதேனும் பொருளிருக்குமா என்ற எண்ணம் சோர்வை உண்டாக்கியது. அது இத்தனை வருடங்கள் இருந்த சோர்வைவிட அதிக கனமானதாக அழுத்தியது.

       எத்தனை மகிழ்ச்சியாக இருந்தது லக்குவனை மணம் செய்து கொண்டபோது. ஒளிரும் மேனியன். கனிவுப் பார்வையன். இனிய சொல்லினன். மயக்கும் முறுவலினன். மென்னணைப்புக் கரத்தினன். மற்றவையெல்லாம் சிறுத்து மறைந்துபோக  பூவுலகிலேயே இவர்களிருவர் மட்டுமே இருப்பதாகவும்  மொத்த இன்பமும் இவர்களுக்காக மட்டுமே என்ற எண்ணமுமெழ விம்முறும் உவகையுடன் பறந்தாள்.

      ஆனால், சில தினங்களிலேயே, தனயனின் உறுதுணையென இருப்பதன்றி வேறொன்றும் தனக்கொரு பொருட்டில்லை என்ற கணவனின் பிறவிக்குணத்தை அறிந்தவுடன் சிறகுதிர்ந்த ஈசல்போல மண்ணில் விழுந்தாள். வாழ்வின் நெறியென ஒன்றை வகுத்துக் கொண்டவர்களுடன் வாழ்வதைப் போன்ற சோர்வளிக்கும் வேறொன்று உலகிலில்லை என்பதை அறிந்தாள்.     

   இந்த அறிதலின் மூலம் அடுத்து அரசாளப் போகிறவரின் கரம்பற்றிய சீதையின் மேல் இவளுக்கிருந்த மெல்லிய காழ்ப்பு இப்போது கரைந்துபோனது. சீதை சகோதரியானாலும் மூன்று வயது மூத்தவளானதாலும் தந்தையின் செல்லப் பிள்ளையாக  இருந்ததாலும்  பிறந்ததிலிருந்தே மெல்லிய விலக்கம் ஏற்பட்டிருந்தது. உள்ளுக்குள் பிரியம் ஊறினாலும் அதை காட்டிக் கொண்டதேயில்லை. அருளின் ஆழியானை மணந்த அவள் பாடு, தன் பாட்டைவிட பல மடங்கு இருக்குமே என்ற எண்ணமெழுந்து அவள் மேல் லேசாக பரிதாபம் மனதில்  தோன்றியது. அப்போது, ஏனோ அவள் கரங்களைப் பற்றிக் கொண்டிருக்க வேண்டுமென  ஒருவித வாஞ்சை தோன்றியது.  அரச நிகழ்வுகளில் சீதையை சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் போதும் அவளிடம் உரையாட இயலாது. மென் முறுவலுடன் விழி நோக்கிக் கொள்வதுடன் சரி. ஆனால், அவளைக் காணும் ஒவ்வொரு முறையும்  தன் மனம் நிறைவில் பூரித்து விம்முவதை கண்டு வியப்பாள். உலகையே ஈர்க்கும் ஏதோவொன்று அவளிடம் உள்ளதால்தான், அவளால் இந்த ரகுகுல ராமனை மணக்க முடிந்தது என்பதை உணர்ந்தாள்.

      ராமனும் சீதையும் நிறைவுடன் தோன்றுவதைக் காணும் போதெல்லாம் பழுதற்ற ஒன்றைக் காணும்போது உள்ளுக்குள் எழும் பதற்றத்தில் மனம் லேசாக நலுங்கும். இது நீடிக்காது ... ஏதோவொன்று பிழையாக நிகழவுள்ளது என மனதாழத்தில் எழும் எண்ணம் தன் பொறாமையின் அவாவென்றே ஒதுக்கினாள். ஆனால், அது நிகழ்ந்தபோது தனக்கு பெரிய அதிர்ச்சி எழாமல் இருந்ததற்கு தான் முன்னுனர்ந்ததே காரணம் என்று புரிந்தபோது தான் எண்ணியதைத்தான் தெய்வம் நிறைவேற்றியதோ என்ற பதைப்புடன் தன்மேலேயே கடும் சினமும் எழுந்தது.  துயரில் மூழ்கி அனைவரின் முகமும் கருத்ததில் நாடே பெரும் அந்தகாரத்தில் உறைந்தபோது, தனக்குத் தோன்றியதைப் போன்றே பலருக்கும் தோன்றியிருக்கக் கூடுமென்றும், அது நிகழ்ந்துவிட்டதால்தான் குற்றவுணர்வில் மிகையாக துயரை வெளிக்காட்டினார்கள் என்றும் தனக்குத்தானே கூறிக்கொண்டு சமாதானம் அடைந்தாள்.

        ராமன் பிறந்தவுடனேயே அனைவரும் அறிவர் அவன்தான் அயோத்தியின் அடுத்த அரசனென. ஆயினும், அவன் முடி சூடுவதற்கான நாள் குறிக்கப்பட்டபோது எதிர்பாராத புதிய இனிய செய்தி கிடைத்தது போலவே  மக்கள் தங்களின் மகிழ்ச்சியை மிகுதியாக வெளிப்படுத்தி நகரையே ஒளியால் நிரப்பினர். தாங்கள் செய்வது பாவனை எனப் புரிந்தபோது அந்த எண்ணம் எழுந்ததற்காக கூசி, மேலும் மிகையாக, மகிழ்வாக இருப்பதாக ஆர்ப்பரித்தார்கள். பெருகிக் கொண்டே சென்ற ஒலியாலும் ஒளியாலும் நகரமே வெடித்துவிடக் கூடுமோ என்ற பதைப்பு ஏற்பட தொடங்கிய கணம் ராமனின் வனவாச  செய்தி கசிந்தது. தாங்கள் மனதாழத்தில்  எதிர்பார்த்திருந்த மாற்றுச்  செய்தி கிடைத்த பரவசத்தில் ஒருவருக்கொருவர் கூறிப் பரப்பினர். ஒரு கட்டத்தில் தங்கள் சொற்களில் தொணித்த மகிழ்வினை அறிந்தவுடன் தங்கள் மேலேயே அருவெறுப்புக் கொண்டு துயருக்கு மாறினார்கள். மகிழ்வின் பக்கமே மிக தூரம் சென்ற ஊஞ்சல் துயரின் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. உச்சத்தை எட்டியிருந்த ஒலியும் ஒளியும் சட்டென ஒரு கணத்தில் அணைந்து, நகரையே  தாங்கவொண்ணா அமைதியுடன் பேரிருளுக்குள்  தள்ளியது. நகரிலிருந்த அத்தனை உயிர்களும் தங்களால் செல்ல முடிந்த உச்சபட்ச துயரை அடைந்தன. முடி சூடும் நாளல்லாது பிறிதொரு நாளாக இருந்திருந்தால் இத்தனை துயராக தெரிந்திருக்காதோ என்ற எண்ணம் ஊர்மிளாவிற்கு பின்னர் ஒருமுறை தோன்றியது.

      கைகேயின் வரத்தால் ராமன் வனம் ஏகுகிறான் என்ற செய்தி சற்று பிந்தியே ஊர்மிளாவை அடைந்தது. தனக்கு தேவையில்லாத தகவல்களை தன்னிடம் கூறவேண்டியதில்லை என தன் பணிப்பெண் வனிதையிடம்  உறுதியாக கூறிவிட்டதால் இவளுக்கு தகவல்களை அளிப்பதற்கு அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. பசியுடன் அள்ளி உண்பவனுக்கே மனமுவந்து வாரி வைக்கும் பரிசாரகன் போல ஆவலுடன் கேட்பவர்களிடமே செய்திகள் விரைவாக கூறப்படுகின்றன. நகரின் கம்பலை மெதுவாகக் குறைந்து அடங்கியதை உணர்ந்த பின்பே ஊர்மிளா வனிதையிடம்  வினவினாள். விவரத்தை அறிந்தவுடன் அதிர்வுடன் மாளிகையின் உள்ளறையிலிருந்து மாடத்திற்கு வந்து பெருஞ்சாலையை இவள் நோக்கிய போது, அலங்காரமற்ற தேரை அமைச்சர்களுள் ஒருவரான  சுமந்திரன் இயக்க, தேருக்குள், மரவுரி ஆடைகள் மட்டும் அணிந்து ராமன் முன் நிற்க சீதையும் இலக்குவனனும் அவனுக்கு இரு புறமும் நின்றார்கள். இந்த சுமந்திரன்தான் ராமன் பிறப்பதற்காக வேள்வி நிகழ்த்த, கலைக் கோட்டு முனிவரை அழைத்து வந்தவர். இப்போது நிகழும் முரணை எண்ணிக் கலங்கியபடி, தேருக்குப் பின்னால் எண்ணற்கரிய நகர மாந்தர்கள் தளர்ந்த உடலுடன் தலை தாழ நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு கணம் தலையை சொடுக்கி கனவிலிருந்து விழித்துக் கொள்ள முயன்றாள். பதறியபடி மாடச் சுவர் மீது கரங்களால் வேகமாக அடித்தாள். விரல்களில் வலி தெரிந்ததும் நிகழ்வது கனவல்லவென்றே உணர்ந்தவள், ஓடிவரும் களிறின் முன் செய்வதறியாது நிற்பவன் போல செயலற்று நின்றாள். சுற்றி நின்ற பணிப்பெண்களின் விழிகளில் நீர் சொட்டியதை கண்டதும்தான் தானும் துயர் கொள்ள வேண்டுமே என்ற எண்ணமே வந்தது. "என்னவாயிற்று எனக்கு... உணர்வுகள் மரத்துப் போயினவா.. முடி சூட வேண்டிய ராமனும் அவன் மனைவி சீதையும் கானகம் செல்ல உடன் என் கணவனும் செல்கிறான். கதறித் துடிக்காமல் வெறுமே பார்த்துக் கொண்டிருக்கிறேனே. மனநிலை பிறழ்ந்துவிட்டதா... அல்லது மூச்சு நின்றுவிட்டதா.. உடலில் இருந்து வெளியேறி என்னை நானே நோக்குகிறேனா" என்று தனக்குத்தானே ஊர்மிளா பேசிக் கொண்டிருப்பதை என்ற செய்வதென்று புரியாமல் அச்சத்துடன் நோக்கினாள் வனிதை. அதே கணம்ஊர்மிளா தன் மனதாழத்தில் மெல்லிய உவகையொன்று எழுவதை அச்சத்துடன் நோக்கினாள். அதை விலக்க முயன்றபோது, தன் கணவன் மேல் பெரும் சினம் எழுந்தது. அனுமதி கோரவேண்டாம், ஒரு தகவலாவது கூறிச்செல்ல வேண்டுமென அவனுக்குத் தோன்றவில்லையே. தன் நினைவு ஒரு கணமும் எழாத  அவனை நினைத்து, அவன் வரும் நாளை எண்ணியபடி விழிநீர் உகுத்துக் கொண்டு வழி நோக்கி காத்திருக்க வேண்டும். ராமன் செல்ல வேண்டுமென்பது கேட்கப்பட்ட வரம். அவன் மனைவி உடன் செல்வது ஏற்கத்தக்கது. இவன் செல்வது எதற்காக. வீரத்தில்  இவனையும் விஞ்சியவன்தானே ராமன். அவனுக்குத் தன்னை காத்துக் கொள்ள தெரியாதா அல்லது முடியாதா. இவன் செல்வது வெற்று ஆணவத்திற்காக மட்டுமே.  இவன்தான் பெரும் பாசம் கொண்டவன், தனயனை பிரியாதவன் என நாடு போற்ற வேண்டும் என்பதற்காக. நாட்டை ஆளப்போவது பரதன். அவன்  ஆளும் நாட்டில் அவனுக்கு கை கட்டி பணிந்து வாழமுடியுமா... கிளம்பிவிட்டான் கரம்பிடித்து வாழவந்தவளிடம் ஒரு வார்த்தையும் இயம்பாமல். அடி பணியும் இழிவிலிருந்தும் மீளலாம்... அண்ணனின் பாதுகாவலன் என புகழும் பெறலாம். சோதர்கள் மூவரும் தங்கள் மனைவிகளை கூடவே இருத்திக்கொள்ள இவன் மட்டும் தன் மனைவியை பதினான்கு ஆண்டுகாலம் பரிதவிக்க விட்டுச் செல்கிறான். ஊர்மிளாவின் மனதிற்குள் லக்குவனின் மீது வெறுப்பு கூடிக்கொண்டே சென்றது. பெருகும் அதன் வேகத்தை அச்சத்துடன் நோக்கிக் கொண்டிருந்தாள் மறுநாள் விடியல் வரை.

      அமர்ந்தபடியே கண்ணயர்ந்துவிட்டவள் விழித்தபோது, தேரில் அழைத்துச் சென்று மூவரையும் நகரத்திற்கு வெளியே விட்டுவிட்டு வந்த  சுமந்திரன் இவளைக் காண்பதற்காக காத்திருப்பதாக வனிதை  கூறினாள். அதைக் கேட்டதுமே    மெல்லிய திகைப்பு தோன்றியது. லக்குவன் ஏதேனும் செய்தி சொல்லியனுப்பி இருப்பான்... மனைவிமேல் பாசமே இல்லாதவன் என்று தவறாக எண்ணி என்னென்ன சொற்களிலெல்லாம் வைதுவிட்டேன். மனதிற்குள்ளேயே என்றாலும் வைதல்தானே. நானொரு பித்தி. பித்தியேதான். இல்லாவிட்டால் மனங்கவர்ந்த கணவனை, மனைவியை மறவாத நேசனை வெறுத்திருப்பேனா... என்றெல்லாம் எண்ணங்கள் எழ விரைந்து வெளியே வந்து சுமந்திரனைச் சந்தித்தாள். முகம் மலர

"கூறுக சுமந்திரரே. என் இறைவன் என்னிடம் உரைக்கச் சொன்னதென்ன"  என வினவினாள்.

  சுமந்திரன் முகத்தில் திகைப்பு  தோன்ற நோக்கினான்.

  "ஏன் தயங்குகிறீர்கள். உடனே கூறுங்கள். அவரின் சொற்களை கேட்க நான் துடிப்பது  தெரியவில்லையா" என்று லேசாக சினம் தொணிக்க ஆர்வம் மிகுந்த விழிகளுடன் நோக்கினாள்.

  "மன்னிக்க வேண்டும் தேவி...  இளையவர் தங்களிடம் கூறச் சொல்லி எதுவும் உரைக்கவில்லை" என்று தயக்கத்துடன் கூறினான்.

    அவன் கூறியது செவியில் விழுந்தபோதும் அதன் பொருளை உள்வாங்காத முகத்துடன் திகைத்து நின்றாள். லக்குவன் மீதான சினம் மீண்டும் சொற்களாக மாறப் போவதை எண்ணி அஞ்சியவளாக அதை தவிர்க்கும் பொருட்டு "வேறென்ன செய்தி. எதற்காக என்னை காணவந்தீர்கள்" என வெறுப்பு வெளிப்பட கேட்டாள்.

   "மிதிலை அரசிதான் தங்களிடம் ஒரு வேண்டுதல் வைத்துள்ளார். அதை உரைக்கவே நான் வந்தேன்" என்று அவர் முடித்தபோது ஊர்மிளாவிற்கு ஆச்சர்யத்தில் இதழ்கள் விரிந்தன. அவள் மறுக்காததால் "அவர்கள் வளர்த்து வந்த கிள்ளைகளையும் பறவைகளையும் தங்களை கவனித்துக் கொள்ள வேண்டினார்" என்று சுமந்திரன் சொல்லி முடித்தார். முதலில் அவர் கூறியதை மறுக்க எண்ணினாள். ஆனால் சில கணங்கள் யோசித்தபோது இவள் முகம் மலர்ந்தது. சரியாக அக்கணத்தில் ஊர்மிளையை வணங்கி விடைபெற்றுச் சென்றார் சுமந்திரன்.      

      சீதை, தான் பிரியத்துடன் வளர்த்துவந்த கிளிகளை கவனித்துக் கொள்ளும்படி தன்னிடம் கூறியது இவளுக்கு மிகுந்த உவகையளித்தது. "கைகேயின் வரத்தின் மூலம் சாபம் பெற்றது நான்தான் என்பதை சீதை உணர்ந்திருக்கிறாள் போலும்.  பதினான்கு ஆண்டுகள் கணவனைப் பிரிந்த துயரை தனிமையின் ஏக்கத்துடன் கழிக்கப் போகிறவள் இவள்தான். எனவே, துயரைத்தான் தீர்க்க இயலாது. ஆனால் தனிமையை போக்க முடியுமென தன்னால் இயன்றதை ஆற்றியிருக்கிறாள். அவளுக்காவது என் நினைவு வந்ததே" என்று எண்ணியவளின் மனதினுள்ளே "உன் மீதுள்ள பாசமில்லை. இது, தன் கிளிகளின் மேல் உள்ள அக்கறை" என்று அழுத்தமான குரலொன்று முணங்கியது. "கிளிகளின் மேலுள்ள அக்கறையென்றால் யாராவதொரு பணிப்பெண்ணிடம் கட்டளை இட்டிருக்கலாமே. என்னிடம் கோரவேண்டியதில்லையே, என் தனிமையை போக்க வேண்டும் என்பதுதான் அவளின் நல்லுள்ளக் கிடக்கு" என்ற பதிலால் அத்த முனகலை நசுக்கினாள். ஓடிச்சென்று கிளிகளை அடையவேண்டும் என்ற எண்ணத்தை அடக்கியபடி, உடல் துள்ள உற்சாகத்துடன் நடந்தாள். துயருடன் எதிர்பட்டவர்கள் வியப்புடன் நோக்கியதை பொருட்படுத்தாமல் விரைவு நடையுடன் சென்று அவற்றை அணுகினாள்.

      சில திங்களுக்கு முன் கீழ தேசத்திலிருந்து வந்த வணிகனொருவன் மன்னரைக் காணவந்தபோது பரிசாக அளித்தவை அந்த கிளிகள்.  இளநீலமும் செந்தூரமும் கலந்து நீளமான இரட்டை வாலுடன் உடலில் மெல்லிய துடிப்புடன் இருந்தது. வளைந்திருந்த அதன் மேல் அலகோடு சிறிய கீழலகை ஒட்டியும் விலக்கியும் எழுப்பிய ஒலி இனிய இசையெனவே ஒலித்தது.  அக்கிளிகளை நேராகவே சீதையிடம் அளித்தார் வேந்தர். வேந்தரின் விருப்பத்தை மறுக்கும் முறைமையில்லை என்பதால் சீதையிடமே அவை வளர்ந்தன.   இரு திங்களுக்குள்ளாகவே அவை முட்டையிட்டு ஏழு குஞ்சுகளை பொரித்தன. எப்போதாவது சீதையின் மாளிகை அருகில் செல்லும்போது அவள் சிறு மகவுகளிடமென அவற்றுடன் உரையாடிக் கொண்டிருப்பதை வியப்புடனும்  கண்டிருக்கிறாள். ஊர்மிளைக்கு எப்போதுமே பறவைகளை  வளர்ப்பதில் ஆர்வம் இருந்ததில்லை. அதோடு, வானில் பறந்துவிரும்பிய மரத்திலமர்ந்து துயரின்றி வாழும் அவற்றை கூண்டுகளில் அடைத்து வளர்ப்பவர்கள் மேல் மெல்லிய ஒவ்வாமையும் ஏற்படும். ஆனால், இப்போது இந்தக் கிளிகளைக் கண்டபோதே ஊர்மிளையின் மனம் துள்ளியது. கணவன் மேல் வெறுப்பை பெருக்கிக் கொண்டேயிருந்த மனதை வேறொன்றில் மடை மாற்றிவிட தவித்தவளுக்கு சரியான தருணத்தில் சீதையின் கோரிக்கை கிடைத்தது பெரும் ஆசுவாசத்தை அளித்தது.

        சீதை பிரிந்து சென்றதை உள்ளுணர்ந்துவிட்டவையென பரிதவிப்புடன் ஓசையெழுப்பியபடி கிளிகள்  கூண்டுகளுக்குள் சுற்றிச் சுற்றி வந்தன. முன்தினம் வைக்கப்பட்ட பழங்களும் நீரும்  தீண்டப்படாமல் அப்படியே இருந்தன. இவள் அருகில் வந்தவுடன் சற்று நிதானித்து இவளை கூர்ந்து நோக்கின. இவள் முகத்தில் பொங்கிய மகிழ்வையும் பரவசத்தையும் கண்டோ என்னவோ தங்களை இனி பராமரிக்கப் போகிறவள் இவள்தான் என உணர்ந்து கொண்டவைபோல தத்தளிப்பை விட்டுவிட்டு மெல்ல இயல்புக்குத் திரும்பின. அங்கிருந்த பணிப்பெண்களின் மூலம் அவற்றை பராமரிப்பதன் நுட்பங்களை அறிந்தாள். கணவனின் மீது எழுந்திருந்த வெறுப்பினை  விட்டுவிட்டு உள்ளம் அப்படியே கிளிகள் பக்கம் முழுமையாக திரும்பிவிட்டதை வியப்புடன் நோக்கினாள். உள்ளமும் நீர் போலத்தான் போல. பாயக் கிடைத்த பள்ளமான திசைகளில் பரவி ஓட ஆரம்பித்துவிடுகிறது.

      லக்குவனின் நினைவுகள் மனதில் எழும் போதெல்லாம் சட்டென மனதை கிளிகளை நோக்கித் திருப்பினாள். பெருங்குன்றென பெருகி நின்றிருந்த அவன் மீதான புகார்கள் அப்படியே இருந்தன. மூவரும் கானகம் ஏகிய மறுநாள் வேந்தர் தயரதன் இறந்தபோதும் இவள் பெரிதாக துயரடையவில்லை. அரவம் தீண்டி துடிப்பவனைதேள் கொட்டியதெனவே ஊர்மிளா இதைக் கருதினாள். சில தினங்ளுக்குப் பிறகு கைகேயத்திலிருந்து பரதன்  வந்து சேர்ந்ததையும் தந்தைக்கு இறுதி காரியங்கள் ஆற்றியபின் கானகம் நோக்கி படையுடன் சென்றதையும் வனிதை கூறிய செய்தியை உள்ளத்திற்குள் செலுத்தாமல் செவியோடு திருப்பிவிட்டாள். இறுதிவரை காப்பேன் என முப்பெரும்   தெய்வங்களையும் தேவர்களையும் சான்றாக வைத்து வேள்வித் தீயை வலம் வந்து கரம் பிடித்தவன்எதுவுமே உரைக்காமல் வனம் ஏகிய துயர் மனமெங்கும் நிறைந்திருக்கும் போது வேறு எந்தச் செய்திகளையும் ஒரு பொருட்டாக அவள் கருதவில்லை.

     பரதனுடன் கானகம் செல்லும் படையுடன் சென்று கங்கைக் கரையில் குகனை சந்தித்தபின் ராமன் சென்ற திசை நோக்கி சென்ற படையுடன்  தொடர்ந்து செல்ல முடியாமல் சிறிய உடல் நலிவுடன் திரும்பிய சுமந்திரன் ஊர்மிளாவை சந்திக்க வந்தார். 

     சில வாரங்களுக்குள் உருமாறியிருந்த சுமந்திரனை வெற்றுப் பார்வையுடன் நோக்கினாள். "தேவி, தற்போதும் தங்களுக்கு இளையவரிடமிருந்து எந்தச் செய்தியும் கொண்டு வரவில்லை" என்று அவர் கூறியபோது தன் பார்வையில் எவ்வுணர்வும் காட்டாது அவர் கூறவந்ததை தொடர்ந்து கேட்கும் வண்ணமே நின்றாள்.

"ஆனால், இளையவரைப் பற்றி ஒன்று கூற வேண்டுமெனத் தோன்றியது. அதற்கு தாங்கள் அனுமதிக்க வேண்டும்" எனப் பணிந்தான்.

"சரி, கூறுங்கள். புதிதாக என்ன இருக்கிறதென அறிகிறேன்"

"கங்கைக் கரையிலுள்ள மீனவர்களுக்கெல்லாம் தலைவரென ஒருவர் உள்ளார். திரண்ட கரிய மேனியுடன் பெரு வீரனவர். அவர் நாமம் குகன்"

    இதையெல்லாம் ஏன் கூறிக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் மேலிட நோக்கிக் கொண்டிருந்தாள் ஊர்மிளா.

"அவர், நம் மூத்த இளவரசர் ராமர் மீது பெரும் மதிப்புக் கொண்டுள்ளவராக உள்ளார். இளையவர் பரதர்அவரிடம், இரவு மூவரும் எங்கு துயின்றார்கள் என வினவினார். அவர், ஒரு இடத்தைச் சுட்டி இராமரும் சீதாப் பிராட்டியும் துயின்ற இடம் இதுவெனக் காட்டினார்" 

ஊர்மிளாவின் மனம் ஏனோ வேகமாகத் துடித்தது.

"பரதர் மீண்டுமஇளையவர் லக்குவன் எங்கு துயின்றார் என வினவினார். அப்போது குகன்...." சொற்கள் வராமல் விம்மய சுமந்திரன் விழிகளில் நீர் வழிந்தது.

 

"ஏன் அழுகிறீர்கள்... என்னவாயிற்று..." என்று பதறும் குரலில் கேட்டபோதே ஏனென்று அறியாமல் ஊர்மிளாவின் விழிகளும் கலங்கின.

"அவர் கூறினார்.... இரவெல்லாம் இளையவர் துயிலாமல் தன் பலமான வில்லை பிடித்தபடியே அவர்கள் இருவருக்கும் காவலென நிமிர்ந்தபடியே  நின்றார் என்று" 

     அப்படியே சரிந்து அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தாள். சுமந்திரன் கன்னங்கள் வழியே நீர்வழிய வணங்கியதையோ வெளியே சென்றதையோ அறியாமல் திகைத்திருந்தாள். "...எத்தகைய குணத்தவன் என் கணவன். தன் தமையனுக்காக வாழ்வை அர்ப்பணித்தவன் என்று மணநாளன்றே கூறினானே. ஆனால் இத்தனை உறுதியுடன் கடைபிடிப்பான் என்று அறியாமல் அல்லவா அவன் மேல் வெறுப்பு கொண்டேன். தான் கொண்ட கடமைக்கென தன் இன்பங்கள்  அத்தனையும் துறப்பவனை எளிய கணவன்போல நடந்துகொள்ள வேண்டுமென பேதை போல எண்ணிக் குமைந்திருந்தேனே. நான் அறிவிலி. அவரின் மேன்மையை காண்பதற்கான விழியற்ற குரூபி. எத்தனை மன திடம் இருக்கவேண்டும் பதினான்கு ஆண்டுகளும் உணவு, உறக்கம்,அரசுமனைவி என எதையும் கருதாமல் தமையனின் நலத்தை மட்டுமே கருதுவதறகு..." எண்ணங்கள் மனதினுள் ஓடிக் கொண்டேயிருக்க விழிகளில் நீர் வழிந்து கொண்டேயிருந்தது. பணிப்பெண்கள் காரணமும் செய்வதும் அறியாமல் சிலைத்திருந்தார்கள். அப்போது கிளிகளின் கீச்சிடும் ஓசை உரக்க ஒலித்ததும் ஊர்மிளா நிலை மீண்டாள். சுற்றிலும் பொருளின்றி நோக்கியபின் தெளிந்து கிளிகளிடம் சென்றாள். இவள் அருகில் சென்றவுடன் அவை தங்களின் குரல்களை இதமாக மாற்றிக்கொண்டு கீச்சிட்டன.  இனி வாழப்போகும் வாழ்வின் பொருள் புரிந்தது போல் இருந்தது. மீதமிருக்கும் அத்தனை தினங்களையும் கணவன் நலனை கண்டறியா பரம்பொருளிடம் வேண்டுவதன்றி பிற எணணங்கள் தன்னை தீண்டவும் அனுமதிப்பதில்லை என உறுதி கொண்டாள். ஊர்மிளாவிற்கு,    அக்கணத்தில் ஒரு சிலிர்ப்பென அவ்வெண்ணம் தோன்றியது.  இங்கு மகிழ்வுடன் அவனை எண்ணியபடி திளைத்திருந்தால் அவன் உள்ளமும் உடலும் சோர்வின்றி திகழுமென்று. வேள்வியில் அவியாக அளிக்கப்படுபவை விண்ணில் உள்ளவர்களை அடையுமென்றால் என்னுடைய வேண்டுதலும் பலிக்கும். நான் இங்கே அவரையெண்ணி  நிறைவுடன் ஆற்றுபவை அவரையடைந்து அவரை தேற்றும் என திடமாக நம்பினாள்.  தாய் உண்பதால் ஊட்டம் பெறும் கருக்குழவியென தான் இன்புற்றிருந்தால் மட்டுமே மணவாளன் சக்தியுடனிருப்பான் என்றே உறுதியுடன் நம்பினாள்  இலக்குவனிடம் உரையாடுவதெனவே கிளிகளிடம் உரையாடினாள். சிரித்தாள். சிணுங்கினாள்.  கிளிகள் எப்படித்தான் உய்த்துணர்ந்தனவோ, எதுவும் புரியாவிட்டாலும்  அவளின் மனம் வருந்தாதவாறு நடந்துகொண்டன.  கிளிகள் சீதை இருந்தபோது உண்ட உணவில் பாதியளவுதான் தற்போது தின்கின்றன என பணிப்பெண்கள் கூறினார்கள். அவையும் உயிர்வாழத் தேவையான அளவு மட்டுமே உட்கொள்கின்றன என உணர்ந்தாள். அதன் பிறகு அவை முட்டை இடவேயில்லை. காமவொறுப்பும் கொண்டுவிட்டன  போலும்.

       உவகையுடன் நன்றாக உண்டு, பணிப்பெண்களுடன் சீண்டலும் கதைத்தலுமாய் விளையாடி, ஆழ்ந்து உறங்கி தினங்களை கழிக்க ஆரம்பித்தாள். . தன் சோதரி சீதையின் மீதும் புதிதாக நேசம் தோன்றியது. இந்தக் கிளிகள் இல்லாதிருந்தால் தன் வாழ்வு எத்தனை வெறுமையாய், வெம்மை மிகுந்ததாய் கழிந்திருக்கும் என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றும். புலரியிலிருந்து அந்திவரை கிளிகளை பார்த்துக்கொண்டே இருத்தாள். சிணுங்குவதும், குறுகுவதும், கோதுவதும், பாடுவதும், கீச்சிடுவதும், கொறிப்பதும், தாவுவதும், பறப்பதும், தொங்குவதும் என அவை செய்வனவற்றை கண்டு தீராது ஊர்மிளாவிற்கு. சில நாட்களிலேயே கூண்டுகளில் இருந்து விடுவித்துவிட்டாள். சுதந்திரமாக மரங்களின் மேல் நுனியில் அமர்ந்து தங்களுக்குள் உரையாடிக் கொள்வதைக் கண்டு எதைப் பற்றியதான உரையாடலாக இருக்கும்... தன்னைப் பற்றியா, தரப்படும் உணவு பற்றியா, தன் உடை பற்றியா அல்லது தங்களுக்குள்ளேயே கேலி செய்து கொள்கின்றனவோ என கற்பனை செய்து  புன்னகைத்துக் கொள்வாள். 

       வெயில் வந்தது. பின் மழை வந்தது. அதன் பின்னே பனி வந்தது. பின்னே இளவெயிலாகி, முதுவெயிலாகி, மழையாகி பின் பனியாகி காலங்கள் மாறிக்கொண்டேயிருந்தன. ஊர்மிளாவின் மனம் எப்போதும் ஒன்றுபோலவே எதுவுமே மாறாமல், தான் சிறு துயரை உணர்ந்தால் கூட கணவனுக்கு பெரும் சோர்வு தாக்கக்கூடும் என்ற எண்ணத்துடன் ஒரு கணத்தின்   துளியின் துளியிலும்  மீச்சிறு துயரும் அண்டிடாமல் இனிமையை மட்டுமே உள்ளத்தில் நிறைத்து புறவுறலகின் எந்த கசடும் தொடாத தொலைவில் தான் மட்டும் தனித்து வாழ்ந்தாள். அவ்வுலகில்  அவளும் அவள் கிளிகள் மட்டுமே.

 

*****

    நேற்றுதான் வனிதை நாளை பதினான்கு ஆண்டுகள் நிறைவுறுவதாகக் கூறினாள். தனித்த உலகில் எதையும் கருதாமல் இருந்தபோதும் அவள் கூறிய வார்த்தை சட்டென இதயத்தை தொட்டது. அக்கணம், பனித்துகள்கள் பட்டதென மேனி விதிர்த்தது. உடலின் ஒவ்வொரு அணுவும் அச்செய்திக்காக காத்திருந்திருப்பதை இப்போது உடலெங்கும் பரவும் இனிமை மூலமே ஊர்மிளா உணர்ந்தாள்.

      ஆயிரக்கனக்கான பொழுதுகள் போனதை உணரவில்லை. ஆனால் ஒருநாள் பொழுது நகர்வதை துளித்துளியாக உணர்ந்தாள். காலம் இத்தனை மெதுவாகவா, இத்தனை எடையுடனா நகர்கிறது என்ற திகைப்புடன் தேர்ச் சக்கரத்தின் அச்சாணியின் முனகலுடன் நகரமுடியாமல் கணம் கணமென கனத்துடன்  நகரும் நேரத்தை பொறுமையின்றி நோக்கிக் கொண்டிருந்தாள்.

      மனம் இனிமையில் தோய்ந்திருந்தது. கரம் பிடித்த நேசனும் உடன் பிறந்தாளும் வரப் போகிறார்கள். எதிரில் காணும்போது இதயம் வெடித்துவிடாமல் இருக்கவேண்டுமே என்ற தவிப்பு தோன்றியது. கண்டவுடன் என்ன பேசுவது. எதை வினவுவது. இத்தனை ஆண்டு வாழ்வை, பேசியோ கேட்டோ, உணர்ந்து விடவோ உணர்த்திவிடவோ இயலுமா. வனங்களிலும் மலைகளிலும் பாலைகளிலும் வெறுங்காலில் நடந்து சென்ற அனுபவங்களை அவரின் சொற்களிலிருந்து தன்னால் உய்த்தறிய முடியுமா. மாளிகையிலேயே இருந்தாலும் கற்பனையில் உருவாக்கிக் கொண்ட உலகில்  தான் வாழ்ந்ததை அவருக்கு உணர்த்திட இயலுமா... எண்ணங்கள் சொற்களாக சிறு புழையிலிருந்து  வெளிவரும் எறும்புகள் போல வந்து கொண்டேயிருந்தன. அவற்றை கட்டுப்படுத்த முயன்றால் திமிறி எல்லாப் பக்கங்களிலும் படர்ந்து பரவின. எதுவும் செய்ய இயலாமல் வெறுமே நோக்கிக் கொண்டிருந்தாள்.      

     பதினான்கு ஆண்டுகள் நிறைவடைந்த பின்னும் கானகத்திலிருந்து ராமன் திரும்பாததால், தான் ராமனிடம் உறுதியாக உரைத்ததை நிறைவேற்றும் வண்ணம் நந்தியம்பதியிடையில் எரிகுளம் ஒறுக்கிய பரதன், தன்னையே அக்னிக்கு இரையாக அளிக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பதாக வனிதை சொல்லிக் கொண்டிருந்தாள். தன் சகோதர்களைப் பற்றி அறியாத அறிவிலியா இவர். அவர்களுக்கு தீங்கிழைக்க இயன்றவர் இவ்வுலகில் இருக்கக் கூடுமென்று நம்புவது எத்தனை மடமை. இவர் ராமனுக்கு இளையவன் என்பது பொய்யா... என்று ஓடிய எண்ணங்களை மறித்து "நீ அவ்வாறு எண்ணிக் கலங்கியதில்லையா" என உள்குரல் ஒன்று எழுந்தது.  அறிதல் பெரும் பாறையென இருந்தாலும் உணர்வுப் பேரலை பொங்கி மோதும்போது மறைந்துதான் போகும். சில கணங்கள் பொறுத்தால் மயக்கம் தீர்ந்துவிடும். ஆனால், பொறுமையின்றி, உணர்வின் உச்ச கணத்தில் நிகழ்த்துபவை மீளாத்துயரில் ஆழ்த்திவிடும் என்று தனக்குள்ளேயே பதிலுரைத்துக் கொண்டாள்.    

     சிறிது நேரத்திற்குப் பின் "அனுமன் எனும் நாமம் கொண்ட பேருருவர் அக்னியை அணைத்து இளையவர் தீ புகுவதை தடுத்துவிட்டார். கானகத்திற்கு சென்ற மூவரும் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்களாம். இவர் மூத்தவரின் அடிமைத் தூதுவர் என தன்னைக் கூறிக் கொண்டு அவரின் கணையாழியை காட்டிவிட்டு கானகத்தில் நிகழ்ந்ததையெல்லாம் உரைத்துக் கொண்டிருக்கிறார்" என்று வனிதை கூறியபோது தன் மனதில் புதிதாக உவகையோ பரவசமோ ஏற்படாததை வியப்புடன் நோக்கினாள் ஊர்மிளா. இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது. மூவரும் இன்று திரும்பாவிட்டால்தானே ஆச்சர்யம் என்ற எண்ணத்துடன் இன்றோடு தன் காத்திருப்பு முடியப் போகிறது என்பதில் ஒரு உவகை தோன்றியது. எத்தனை நீண்ட பகல் இரவுகள். லக்குவனையும் சீதையையும் கண்டு ஆரத்தழுவும் போது தன் தவம் முடியப் போகிறது என்று மனம் உற்சாகமாக துள்ளியபோதே தன் வாழ்விற்கென இருந்த இலக்கு இனிமேல் இருக்கப் போவதில்லை... இனிவரும் நாட்களெல்லாம் எப்பொருளுமின்றிதான் கழியப்போகிறது என்ற ஏக்கம் பெரும் எடையென மனதை அழுத்த ஆரம்பித்தது. கிளிகளை நோக்கினாள். அவை சீதை வருவதை அறிந்து கொண்டவைபோல துள்ளித் திரிந்தன. அவற்றின் நடையிலும் சிறகுகளிலும் மகிழ்வின் விதிர்ப்பு வெளிப்படுவதாகத் தோன்றியது. கிளிகளும் சீதையிடம் சென்றுவிட்டபின் தன் மனதில் ஏற்படப்போகும் வெற்றிடத்தை எண்ணியதில் உண்டான அச்சத்தில் உடல் ஒருகணம் நடுங்கியது. பெருகி வரும் வெள்ளத்தின் ஓசையென நகரத்தில் மக்களின் ஆரவாரம் மெல்ல மெல்ல உயர ஆரம்பித்தது.

       முனிவர்களையும் அமைச்சர்களையும் அன்னையர்களையும் சந்தித்து ஆசிபெற்ற பின் மக்களிடம் சென்று வாழ்த்துகளை பெற்றுக் கொண்டு லக்குவன் தன் மாளிகை ஏகியபோது மிகவும் களைத்து சோர்ந்திருந்தான். வாசலிலேயே காத்திருந்த ஊர்மிளா தன் விழிகளால் அவன் மேனியை முழுவதுமாய் தழுவினாள். சிவந்த மேனி வெயிலில் வாடி கருத்திருந்தது. உறுதியான உடலில் சிறு தளர்ச்சி தெரிந்தது. வலிந்து வரவழைத்த முறுவல் இதழ்களை விரியச் செய்தது. அவன் விழிகளை நிமிர்த்தி இவள் விழிகளை நோக்கியபோது அதில் தெரிந்த வெறுமை இவளை நிலைகுலைய வைத்தது. பாதங்களில் விழுந்து வணங்கி தானே எழுந்தாள். அவன் வாழ்த்து எதுவும் உரைத்தானா என்பதை இவளால் அறியமுடியவில்லை. மாளிகையினுள் வந்தவன் இவளை முழுதாய் நோக்கினான். திமிர்த்த உடல். மிளிரும் மேனி. அலங்கரிக்கப்பட்ட  செறிகூந்தல். உவகை பொங்கும் வதனம். தூய்மை பேணிய இல்லத்தை முகம் சுருங்க பார்வை சுழற்றி நோக்கியவன், எதுவும் கூறாமல் தன் அறைக்குள் வேகமாக நுழைந்தான். அவன் தன்னைத் தழுவுவான் என எண்ணிக்  காத்திருந்தவள் அவனின் சுருங்கிய முகத்தினையே எண்ணி அறுபட்ட கொடியென உள்ளம் துவண்டு ஒரு சொல்லும் எழாத வெற்று மனதுடன் திகைத்து அமர்ந்தாள். 

    மெல்லிய அரவம் கேட்டு வாசலை நோக்கினாள். வனிதை முன் வர தொடர்ந்து  சீதை வந்தாள். இவள் வேகமாக எழுந்து சென்று பாதம் தொட்டு வணங்கினாள். "நலம் திகழ்க" என்று வாழ்த்தியபடி தோளைத் தொட்டு தூக்கினாள் சீதை. "அமர்க அக்கையே" என்று கூறியவள், அமர்ந்த சீதையை உள்ளம் பொங்க நோக்கினாள். முன்பு இருந்த பொலிவு மொத்தமும் சிதைந்து மிகவும் வாட்டத்துடன் இருந்தாள். அதிக வயதானவளாய் தோன்றினாள். துள்ளித் திரியும் விழிகள் சோர்வுடன் நகர்ந்தன. செறிகூந்தல் பொலிவிழந்து உலைந்தாடியது. ஒளிர்ந்த நுதலில் சுருக்கங்களால் ஏற்பட்ட தடங்கள் தெரிந்தன.  இருவருமே எதுவும் உரையாடவில்லை. சீதை ஊர்மிளாவை ஊடுறுவிப் பார்த்தபோது இவள் பார்வையை விலக்கிக் கொண்டாள். இவளின் எழில் தோற்றத்தையும் இல்லத்தின் தூய்மையையும் சில கணங்கள்  நோக்கியபின் எழுந்தாள். "எல்லாவற்றையும் யாரிடமாவது உரைக்க வேண்டுமென உள்ளம் குமைந்தது. அதற்காகவே இளையவள் உன்னை காணவந்தேன். ஆனால்இப்போது எதையும் உரைக்க முடியா வண்ணம் என்னுள்ளம் தாழிட்டுள்ளது" என்று கூறியபடி வாசல் நோக்கி அடியெடுத்து வைத்தாள். "அக்கை உன் கிளிகளைக் காணாமல் செல்கிறாயே.."  என்று கூறினாள்.

  " என் கிளிகளா... எந்தக் கிளிகள்..."  என்று சீதை வெற்றுப் பார்வையுடன் கேட்டபடி இனி எப்போதும் அவற்றை நினைவுகூர இயலாதவளென நடந்தாள். "அக்கை நீ விட்டுச் சென்ற அதே இடத்திலேயே நான் நிற்கிறேன். நீங்கள் காடு, மலை, பாலையில் பட்ட துன்பங்களையெல்லாம் நான்இங்கிருந்தே உணர்ந்தேன். இலக்கு நோக்கி செல்லும் அம்பும் அதன் நிழலும் ஒரே இடத்தை அடைந்தாலும் நிழல் படும் இடங்களை அம்பு அறிவதில்லை, ஆனால் உணரும். அதே துயர் அம்புக்கும் உண்டு.." என்று கூறிக் கொண்டிருந்தாள். வெளியேறிய சீதையின் பார்வையில் தெறித்த வெறுப்பை கண்டவுடன்தான் தன் வாயிலிருந்து சொற்கள் வெளிவரவில்லை என்பதை உணர்ந்தாள். குரலெழுப்பாமல் பார்த்துக் கொண்டிருந்த கிளிகளை நோக்கியபின் பார்வையை திருப்பியபோது ஆடியில்  இக்கணம் மலர்ந்த தாமரைபோல இவளின் பொலிவுரு முகம் தெரிந்தது. ஒரு கணத்தில் கொடுமணத்தை நுகர்ந்ததென பெரும் உலுக்கலுடன் நெஞ்சு அதிர்ந்தது. அப்படியே துவண்டு இருக்கையில் விழுந்தாள். அசோகவனத்தில் சீதையைக் கண்டதைப் பற்றி அனுமன் பரதனிடம் விவரித்ததை கேட்டபோது அப்போதைய  சீதையின் கோலத்தை கற்பனை செய்ய இயலாமல் தவித்த வினிதை, இப்போது ஊர்மிளாவின் தோற்றத்தைக் கண்டவுடன் உணர்ந்து கொண்டாள். அதே கணம் மாடங்களில் அமர்ந்திருந்த கிளிகள் கீச்சிட்டபடி பறந்து இருளுக்குள் சென்றன. இனிமேல் அவை திரும்பாது என்று ஏனோ வனிதைக்குத் தோன்றியது.

 

       (அக்டோபர் 2022, புரவி இதழில் வெளிவந்தது)

 

 

 

 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

களிறன்ன நறுமாமலர்

ஆழ்ந்ததால் திரண்டவை

கோர்க்கப்பட்ட பட்டயங்கள்