வேர் வரை பரவிய விடம்
நூல்: தப்பு
ஆசிரியர்: நாராயணி கண்ணகி
பதிப்பகம்: எழுத்து பிரசுரம்
எழுத்தாளர் நாராயணி கண்ணகி நீண்ட காலமாக எழுதிவருகிறார். "தப்பு" நாவல்தான் நான் வாசித்த அவரது முதல் நூல். இத்தனை காலமாக இவரது நூல்களை வாசிக்காததற்கு குற்றவுணர்வு ஏற்பட்டாலும், நேரமின்மைதான் காரணமே தவிர வேண்டுமென தவிர்க்கவில்லை என சமாதானமடைகிறேன்.
ஒரு மகளிர் காவல் நிலையத்திற்கு வரும் வன்புணர்வு வழக்கு எப்படி விசாரிக்கப்படுகிறது என்பதையும் அந்த விசாரணையின்போது காவல்துறை அலுவலர்கள் அகத்திலும் புறத்திலும் எத்தகைய இடர்களை எதிர்கொள்கிறார்கள் என்பதையும் மிக நுணுக்கமாகவும் சுவாரசியமாகவும் "தப்பு" நாவல் விவரிக்கிறது.
முழு நாவலையும் வாசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் விதமாக நாவலின் முதல் அத்தியாயம் சிறப்பாக உள்ளது. மகளிர் காவல் நிலையத்தின் நடைமுறைகளும் புகார் அளிக்க வந்த கிராமத்தினரின் நடத்தையும் இயல்பான பகடியுடன் எழுதப்பட்டுள்ளது. ஆய்வாளர் மனோன்மணியம் பாத்திரத்தின் வடிவமைப்பு கச்சிதம். வன்புணர்வுப் புகார் என்றவுடன் காவலர்கள் எச்சரிக்கை கொள்கிறார்கள். ஏனிந்த எச்சரிக்கை என்பதையும் இம்மாதிரியான வழக்கு ஆட்சிக்கே பாதிப்பு ஏற்படுத்தும் வல்லமை கொண்டது என்பதையும் நாவலின் பிற்பகுதியில் கூறுகிறார் ஆசிரியர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் பெயரும் பெண்ணின் பெயரும் "சின்ன" என்ற முன்னொட்டுடன் உள்ளது. இது, கிராமங்களில் பரவலாக இருப்பதுதான் என்றாலும் நகரவாசிகளுக்கு வியப்பானதாகவே தோன்றும். வெள்ளந்திகளாக தங்களை வெளிக்காட்டிக் கொள்பவர்களில் சிலர் உண்மையில் அப்படியில்லாமல் வேடமிடுபவர்கள் என்பதை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்களைக் கொண்டு விவரிக்கிறார் ஆசிரியர்.
நாவலின் முதன்மையான பலம் என்பது பலரும் கவனிக்கத் தவறும் சின்னச் சின்ன விசயங்களையும் விவரித்தபடி செல்வது. உதாரணமாக பெண்ணை பாழ்படுத்தியவர்களை தண்டிக்கவேண்டும் என காவல் நிலையத்திற்கு வந்தவர்கள் தீவன மூட்டையை வாங்கி வண்டியில் வைத்துவிட்டு உள்ளே வருவதும், விசாரனை தாமதமாகுமென்றால் நாளை வருகிறோம் இன்று ஆடுகளுக்கு தீவனமிட்டு நீரளிக்க வேண்டும் எனத் துடிப்பதும். கிராமத்தினருக்கு மனித பிள்ளைகளும் விலங்கு குட்டிகளும் சமம்தான்.
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் அவ்வப்போது மாறும் இயல்புகளையும் பேச்சையும் எழுதியுள்ள விதம் சிறப்பு. அதுவும் ஆய்வாளர் மனோன்மணியம் பெண்ணாகவும், அதிகாரியாகவும் தாயாகவும் அவ்வப்போது தன்னை உணர்ந்து வெளிக்காட்டிக் கொள்வது குறிப்பிடத் தகுந்தது.
தற்போது, தினமும் பத்திரிக்கைகளில் தவறாது இடம் பெறும் பாலியல் குற்றத்தை களமாக எடுத்துக் கொண்டு அதன் எல்லாவித உள்ளடுக்குகளையும் காட்ட முயன்றுள்ளார் நாராயணி கண்ணகி. அரசு மருத்துவமனை செயல்படும் விதத்தையும் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் இன்னல்களையும் தவிப்பையும் காட்டிய விதமும் சிறப்பு. வெளியிலிருந்து பார்ப்பவர்கள் தங்களுக்கு தாமதமாகிறதே என்று கொதிப்பார்களேயன்றி பணியாற்றுபவர்களின் நிலையைப் பற்றி சிறிதும் யோசிக்கமாட்டார்கள். இந்நாவலை வாசிப்பவர்கள் அடுத்தமுறை அரசு மருத்துவமனை செல்லும்போது அவர்களின் பார்வை மாறியிருக்க வாய்ப்பு உண்டு.
கிராமங்களில் நடக்கும் பாலியல் குற்றங்களின் உள்ளடுக்குகளும் ஊர் மக்கள் அவற்றை கையாளும் விதமும் புதிதாக இருக்கிறது. பெற்றோர்கள் அதனையும் பணமாக்கிக் கொள்ள முயன்று அதுவொரு எல்லையை அடைந்த பிறகு காவல் நிலையத்தை நாடுவதும் நான் இதுவரை அறியாதது. வாசித்தபோது இப்படியும் இருக்கக்கூடும் என மனம் நம்பிவிட்டது. பஞ்சாயத்தைக் கூட்டி, பாதிக்கப்பட்ட மகளைக் காட்டி பணம் பெறுமளவிற்கு மனித மனங்களில் நஞ்சு பரவிவிட்டதை உணரமுடிகிறது.
நடந்த தப்பை செய்தது யார், அந்தப் பெண்ணை முதலில் சீரழித்தவர்களா, அதற்கு உடன்பட்ட அந்தப் பெண்ணா, இதனையும் பணமாக்கிக் கொள்ள முயன்ற பெற்றோரா, கண்டும் காணாமல் கடக்கும் ஊர் மக்களா என்பதை வாசிப்பவர்களின் சிந்தைக்கு விட்டுவிடுகிறார் ஆசிரியர்.
வாசிக்க சுவாரசியமான நாவலாக இருந்தாலும் பல இடங்களில் காட்சிகளாக இல்லாமல் சொல்லப்படுவதாகவே இருப்பது சற்று மனதை விலக வைக்கிறது. உதாரணமாக மருத்துவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் மனநல மருத்துவரின் விளக்கமும் சற்று கூடுதலாக உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கத்தையும், குற்றவாளியின் தரப்பையும் காட்டியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. எதையெதை எழுதவேண்டும் என்பது ஆசிரியரின் தேர்வுதான் என்றாலும் நாவல் முழுமையடையாத உணர்வை அளிப்பதால் குறிப்பிடுகிறேன்.
வாணியம்பாடி நகரத்தின் பெயர்க் காரணம் உட்பட பல்வேறு விசயங்களை நாவலுக்குள் கொண்டு வந்துள்ளது சிறப்பாக உள்ளது. யாரும் அணுகத் தயங்கும் கருவினை எடுத்துக் கொண்டு நுணுக்கத்தையும் விரிந்த களத்தையும் ஒருங்கே காட்டும் சுவாரசியமான நாவலை அளித்துள்ள எழுத்தாளர் நாராயணி கண்ணகிக்கு வாழ்த்துகள்.
கருத்துகள்
கருத்துரையிடுக