பயிரை மேயும் வேலிகள்

நூல் : சிசு
ஆசிரியர் : பிரதீபா சந்திரசேகர்
பதிப்பகம்: வாசகசாலை
தினந்தோறும் சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் பற்றிய செய்தி வந்துகொண்டேயிருக்கிறது. இது தொடர்வதாலேயே அச்செய்திகளை "ஆங், அதனாலென்ன"... என்ற சலிப்புடன் கடக்கிறோம். பாதிப்படையும் சிறுமிகளைப் பற்றி ஒரு கணமும் எண்ணுவதற்கு நமக்கு நேரமில்லை. அந்தளவிற்கு பணி சார்ந்த அழுத்தமும் குடும்பப் பிரச்சனைகளும் அப்படி இல்லாதவர்களுக்கு சமூக வலைதள ஈர்ப்பும் உள்ளன.
"சிசு" என்ற தன் முதல் நாவலில் பிரதீபா சந்திரசேகர் பாலியல் வன்முறையால் பாதிப்படையும் சிறுமியின் வாழ்க்கையை காட்டுகிறார். அப்பெண், தான் மிகவும் விரும்பும் நபரால் அவ்வன்முறை நிகழ்வதை நம்பமுடியாமல் அதிர்ந்து அதனை சொல்வதற்கும் யாருமில்லாத நிலையில் தவிப்பதையும் விவரித்துள்ளார்.
இளவயதில் உடலளவில் ஏற்படும் பாதிப்பு உள்மனதில் தீராத காயத்தையும் உண்டாக்குகிறது. பிறர் செய்யும் குற்றம் அப்பெண்ணை குற்றவுணர்வுக்கு ஆட்படுத்தும் வகையில்தான் சுற்றமும் சமூகமும் உள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கியே அறிவுரைகளும் அறவுரைகளும் குற்றச்சாட்டுகளும் சொல்லப்படுகின்றன. குற்றம் செய்தவன், எதுவும் நிகழாததுபோல இயல்பாக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்க அப்பெண் மீளவே முடியாத மனநோய்க்கு ஆளாகிறாள். தன் நலன் நாடுபவர்களுக்கும் துயரத்தை அளித்து, அதனால் மேலும் குற்றவுணர்வுக்கு ஆளாகிறாள்.
இந்த நாவல், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறும் அன்மு என்ற பெண்ணின் கதையாகத் தொடங்குகிறது. அவள், அவ்வப்போது தற்கொலைக்கு முயல்வதன் காரணத்தை, மனதிலுள்ள ரணத்தை அறிய மருத்துவர்கள் முயல்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவளது பிற்கால வாழ்க்கையை அறிபவர்கள் அவள் ஏதோவொரு குற்றவுணர்வினால் தவிப்பதை உணர்ந்து அதிலிருந்து மீட்க முயல்கிறார்கள். மிகவும் நட்பாக பழகும் மருத்துவரிடம் தன் வாழ்க்கையை தன் தோழிக்கு நடந்த கதையாக விவரிப்பதாக நாவலின் முக்கியமான பிற்பகுதி அமைந்துள்ளது.
இந்நாவல், ஒரு தனிப்பட்ட பெண்ணின் கதையையே கூறுகிறது. ஆனால், அது பலநூறு பெண்களின் வாழ்க்கையும்தான் என வாசகன் உணரும் வகையில் உள்ளது. எத்தனை பெண் பிள்ளைகள் தான் படும் துயரை பகிர்ந்துகொள்ள யாருமற்று நிர்கதியாக உள்ளார்கள். அதனாலேயே மேலும் மேலும் அத்துமீறலுக்கும் வன்முறைக்கும் ஆளாகிறார்கள் என்று எண்ணம் தோன்றி பதைக்க வைக்கிறது.
முழுவதுமாக பெண்களின் பார்வையிலேயே கதை கூறல் உள்ளது. அம்மா விட்டுவிட்டுச் சென்ற, பள்ளி செல்லும் சிறுமி அத்துமீறலுக்கு ஆளாகும்போது அவளின் உணர்வுகளும் தவிப்பும் நன்றாக எழுதப்பட்டுள்ளன. அயோக்கியத்தனம் அடுத்தடுத்து தொடரும்போதும் அவள் ஏன் தன் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை எனக் கேள்வி எழலாம். ஆனால், அப்படித்தான் நிகழ்கிறது என்பதே அதற்கான பதில்.
மருத்துவமனையில் சிகிச்சையின்போது, வலிக்கிறது என அச்சிறுமி கூறுகிறாள். அங்கிருக்கும் செவிலி தப்புப் பண்ணும்போது வலிக்கலையா எனக் கேட்கிறார். அச்சிறுமி நான் என்ன தப்பு செய்தேன். தப்பு செய்தவரை யாரும் எதுவும் கேட்காமல் தன்னை வசைபாடுவதேன் என மனம் குமைகிறாள். இந்த சமூகம் எப்போதும் இப்படித்தான் பாதிக்கப்பட்டவரையே குற்றஞ்சாட்டி அவர்களின் உள்ளத்தை நொறுங்க வைத்துக்கொண்டே இருக்கிறது. இச்சமூகத்தின் ஓர் அங்கமாக இருப்பதற்காக என் உடலும் மனமும் கூசியது.
இந்நாவலில் இடம்பெற்றுள்ள மருத்துவமனை பற்றிய நுண்ணிய தகவல்களை வாசித்தபோது ஆச்சர்யமாக இருந்தது. இந்நூலாசிரியர் ஒரு செவிலியர் என்பதை அறிந்ததும் மனம் சற்று இலகுவானது. ஒவ்வொரு துறையில் இருப்பவர்களும் எழுதும்போதுதான் அத்துறை பற்றிய செயல்பாடுகளும் அத்துறையில் இருப்பவர்களின் பாடுகளும் வெளியே தெரியும் என்ற கூற்றிற்கு இந்நாவல் வலு சேர்க்கிறது.
பிரதீபா சந்திரசேகருக்கு இது முதல் நாவல். வடிவ ஒருமையும் மொழியழகும் முழுமையானதாக அமையாவிட்டாலும் ஒரு வாழ்க்கையை காட்டியதன் மூலம் நல்ல நாவலாக வந்துள்ளது. தன் முதல் நூலுக்கு கனமான கருவை எடுத்துக்கொண்டு அதற்கான நியாயத்தையும் செய்துள்ளார். நாவல் முடிவடையாமல் உள்ளதாகத் தோன்றலாம். அன்மு தன் மனதிலிருந்த ரணத்தை கீறி வெளிக்காட்டியதன் மூலம், அது சற்று ஆறக்கூடும், அவள் வாழ்வில் சிறிய அளவிலேனும் நிம்மதி தோன்றும் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன். பயிர்களை மேயும் வேலிகளை தடுப்பதற்கு எத்தனை சட்டம் வந்தாலும் போதாது. பெண்கள் வெறும் உடலல்ல அவர்களுக்கும் உணர்வும் உள்ளமும் உண்டு என்பதை ஆண்களுக்கு சிறுவயதிலேயே பயிற்றுவிப்பதற்கு அரசும் சமூகமும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு இம்மாதிரியான களத்தில் பல நூல்கள் வெளிவரவேண்டும். இவற்றிற்கு ஒரு தொடக்கம் அமைத்த பிரதீபா சந்திரசேகருக்கு என் வாழ்த்துகள்.
தொடர்ந்து புதிய எழுத்தாளர்களின் முதல் நூலை வெளியிட்டுவரும் வாசகசாலை பதிப்பகத்திற்கு பாராட்டுகள்.

கருத்துகள்
கருத்துரையிடுக