பழமையிலூறி ஒளிரும் சொற்கள்

நூல்: காதலூறிக் கனியும் காழ்வை
ஆசிரியர்: மித்ரா அழகுவேல்
பதிப்பகம்: வாசகசாலை
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சங்கப் பாடல்களிலேயே காதல் கவிதைகள் உள்ளன. அந்தக் கவிதைகளை இப்போது வாசிக்கும்போதும் அவற்றில் ஏதோவொன்று புதுமையாக புதிதாக தென்படுகிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் பழமையடையாமல் இருப்பது எழுதப்பட்டுள்ள மரபின் சிறப்பு. பெயர் சுட்டாமல், உவமை மற்றும் படிமங்களாலேயே விவரித்து, உணர்வுநிலைக்குள் ஆட்படாமல் விலகி நிற்கும் பாவனையில் எழுதப்பட்டுள்ளதே அவற்றின் புதுமைத் தன்மை நீடிப்பதற்கான காரணம் என நான் கருதுகிறேன்.
சங்கப் பாடல்களுக்குப் பிறகு இன்றுவரை காதல் கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மனித உணர்வுகள் என்பவை ஒவ்வொருவருக்கும் தனித்தனியானவை. பிரத்யேகமானவை. அந்த உணர்வுகளை சொற்களால் முழுமையாக சொல்லிட முடியாததால்தான் மீளமீள வெவ்வேறு சொற்களால் சொல்ல முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆவலும் தீர்வதில்லை. சொல்லியும் முடிவதில்லை. இது எப்போதும் தீராது நிகழ்ந்து கொண்டிருக்கும் விளையாடல்.
பெண்கள் தீவிரமான காதல் கவிதைகள் எழுதுவதற்கு நம் மரபில் உதாரணங்கள் உண்டு. சங்கப்பாடல்களில் வெள்ளிவீதியாரும் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு கோதை நாச்சியாரும். கோதையின் பாடல்களை பக்தி வகைமையில் வைத்தாலும் இறைவன் மீதான காதல் என்றும் கொள்ளலாம்.
பெண்களின் உணர்வுகளை ஆண்கள் எழுதுவதற்கும் பெண்கள் எழுதுவதற்கும் தெளிவான வித்தியாசம் உண்டு. பெண்களின் அகவுணர்வுகளை அத்தனை துல்லியத்துடன் ஆணால் கொண்டுவர முடிவதில்லை. அவ்வுணர்வுகளை உணர்ந்தாலும் சொற்களாக்கி பொதுவெளியில் வைக்கத் தயங்குகிறான் என்றும் தோன்றுகிறது. ஆனால், பெண் கவிஞர்கள் தங்கள் உணர்வுகளை தாங்களால்தானே முன்வைக்க வேண்டும் என உறுதி பூண்டுள்ளார்கள் என்றும் கருதலாம். கவிஞர் மித்ரா அழகுவேல், உறுதி மிக்க கவிஞர்களில் ஒருவர்.
"காதலூறிக் கனியும் காழ்வை" எனும் நூலின் தலைப்பிலுள்ள காழ்வை என்பது அகிற்பூ. மிக வலிமையான அகில் மரத்தின் பூ. தலைப்பே நூலின் உள்ளடக்கத்தை கோடிட்டு காட்டுகிறது. உறுதியான ஒரு பெண்ணை காதல் உணர்வுகள் என்ன செய்கின்றன, அவற்றை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதை கவிதைகளாக்கி உள்ளார் மித்ரா அழகுவேல்.
எளிமையான மனதுடைய பெண் எளிதாக காதல் வயப்படக்கூடும். ஆனால், எப்போதும் அறிவையே பிரதானமாக எண்ணும் மனவுறுதி கொண்ட பெண்மனம் காதலை நம்பாது எள்ளி நகையாடவே முயற்சிக்கும். ஆனால் அவளின் மனமும் ஏதோவொரு புள்ளியில் சலனமடைகிறது. அவள் காதலனைக் காண்பதற்கு கடந்து வரவேண்டியவற்றைக் கூறும் கவிதையின் ஒரு பகுதி:
"ஒரு காதலர் தினத்தில் உன்னைக் காண
நான்
கடந்து வர வேண்டும்.
வழி மறித்து நிற்கும் சொற்களை
கதகதப்பையளித்து வந்த தனிமையை
கழுத்து வரையில் நுரைத்துத்
ததும்பும் கண்ணீரை
என் பழயவற்றை
என் புதியவற்றை
என்னை..."
சொற்களை, தனிமையை, கண்ணீரை, பழயவற்றை, புதியவற்றை அதோடு அவளையும் கடந்து வரவேண்டும். அவள் என்பதை அவளின் தான் எனும் உணர்வு, அகங்காரம், அறிவு, மதிப்பு என்பனவாக எடுத்துக் கொண்டால் பிரமாண்டமாக விரிகிறது இக்கவிதை.
இத்தனையையும் கடந்து வருமளவிற்கு அவன் இவளுக்கு என்னவாயிருக்கிறான் என்பதன் சிறுதுளி:
"நீ அவனியெல்லாம் சுற்றி
என் முற்றத்தில் வீழும் ஆலங்கட்டி
எந்தவொரு அந்தியிலும் பூக்கவே பூக்காத
அந்திமந்தாரை
நான்
நீ ரகசியமாய் வைத்திருக்கும்
பெருங்களி
உன் மார்பில் மலரக் காத்திருக்கும்
ஊதாமுள்ளி"
இக்கவிதையை வாசிக்கும்போது புத்துணர்வு ஏற்படுகிறது. ஆலங்கட்டி, அந்திமந்தாரை, பெருங்களி, ஊதாமுள்ளி போன்ற சொற்களை மனதிற்குள் விரிக்கும்போது ஒரு தண்னுணர்வு தோன்றுகிறது. அச்சொற்களை அழகாக இணைத்து ஒரு அருவ ஓவியமாக்கியுள்ளார் கவிஞர்.
மேற்சொன்ன பலவற்றை இழந்தால்தான் காதலின் பரிசாக முத்தம் கிடைக்கும். அப்படி இழக்காமல் அவற்றை இறுகப் பற்றியிருந்தால் என்னவாகும். கிடைக்காத ஒன்றின் ஏக்கம் மனதை விட்டு அகல்வதேயில்லை. எப்போதும் தொடர்ந்து இம்சித்துக் கொண்டே இருக்கும்:
"பனிக்காலத்தில் உதிரும்
பன்னீர் மலரைப் பார்க்கையில்
அருவியினடியில் கைகளை
இறுகக் கட்டிக்கொண்டு நிற்கையில்
நல்ல கவிதை ஒன்றை வாசிக்க நேர்கையில்
நள்ளிரவில் திடுக்கிட்டு விழிக்கையில்
அகல் நெருப்பின் சுடுதலில்
நிலைவாசலில் தலையிடித்து வரும்
விசும்பலில் கூட
நான் உன் முத்தத்தை நினைவு கூர்கிறேன்
நீ இன்னும் தரவே தராத
நான் இன்னும் பெறவே பெறாத முத்தம்"
வாழ்வில் எப்போதுமே நம் தேர்வுக்கு இரண்டு பாதைகள் இருக்கும். நம் மனம் விரும்பும் பாதையை தவிர்த்து வாய் வேறொன்றைச் சுட்டிவிடும். ஆனால், பின்வாங்க ஆணவம் இடங்கொடுக்காது. பிறகென்ன, மீதி வாழ்நாளெல்லாம் ஏக்கம் பெருகி வழிந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான்:
"அப்போதே
சுதாரித்திருக்கலாம்தானே
வாய் வரை வந்துவிட்ட
வார்த்தையை அப்படியே
முழுங்கியிருக்கலாம்தானே
கொஞ்சமே கொஞ்சம்
விட்டுக்கொடுத்திருக்கலாம்தானே
இருக்கலாம்தான் ...
என்ன செய்ய
கையெட்டும் தூரத்தில் இருக்கும்
கொன்றையை விடவும்
கடலாழத்தில் கைபடாது மண்டிக் கிடக்கும்
பவளப்பாறையைத்தான் நாடுகிறது
பாழும் மனம்"
அகங்காரத்தை விட்டு காதலை சொல்ல முடியாவிட்டால் என்னவாகும். பசலையின் பிடியில் உள்ளமும் உடலும் சிக்க வேண்டியதுதான். காதலை ஏற்பதால் எத்தனை இனிமை நிகழும்...:
"படி தாண்டிச் செல்
உன் வழியேகு
கொட்டும் மழை நிற்கையில்
உனக்கென ஓர் மலர்
குளிர்வாய் முகிழ்ந்திருக்கும்
உடல் சிலுப்பும் ஓர் பறவை
உன் வரவிற்காய் காத்திருக்கும்
தண்ணென ஓர் நிலவு
உன் பொழிவு காண வந்திருக்கும்
இவையெல்லாம் விடுத்து
போயும் போயும்
நீ பசலையிலா மாய வேண்டும்?"
சங்க காலத்து தலைவியர்களுக்கும் இப்போதுள்ள பெண்களுக்கும் காதலில் வேறுபாடு உண்டாயென்ன? உணர்வுகளுக்கு காலதூரமெல்லாம் கணக்கில்லைதானே:
"என் புகைப்படங்களுக்கு
நீதான் முதலில்
விருப்பக்குறியிட வேண்டும்
என் அழைப்பிற்கு
நீ அடுத்த நொடியே
செவிசாய்க்க வேண்டும்
என் கைபடும் தூரங்களிலேயே
நீ உலவ வேண்டும்
கார்பொழுதில் திரும்புவதாகச்
சென்ற தலைவனை எதிர்நோக்கி
தொடியுதிரக் காத்திருந்த காலமெல்லாம்
முடிந்து விட்டது என்றா நினைக்கிறாய்...
கண்ணா...
சங்கத்தலைவியின் பெரும்பொழுதுகள்
கடந்த காத்திருப்பிற்கும்
என் சிறுபொழுதே தாளாத பரிதவிப்பிற்கும்
பெரிதான வேறுபாடுகளுண்டா
வைகறையில் எழுந்து
உறைந்த நீரை மேலே வார்த்துக்கொள்வது
பக்தியினால் மட்டுமில்லைதானே..."
இப்படி கவிதைகளைச் சொல்லிக் கொண்டே சென்றால் முழுத் தொகுப்பையுமே கொடுக்க வேண்டியதிருக்கும். பெரும்பாலான கவிதைகள் சங்கக் கவிதைகளின் இனிமையை, புதுமையை கொண்டிருக்கின்றன என்பதே இக்கவிதைகளின் சிறப்பு. இதன் பொருள், சங்கக் கவிதைகளின் சொற்களை கையாண்டிருக்கிறார் என்பதல்ல. எக்காலத்திற்கும் மாறாதிருக்கும் உணர்வுகளை புதுவித உவமைகளுடன் கவிதையாக்கியுள்ளார் மித்ரா அழகுவேல்.
கவிதைகளுக்கான தலைப்புகளும் ரசிக்கவும் யோசித்து திளைக்கவும் வைக்கின்றன. நிலவின் நிழல், மீச்சிறு நசை, இதழ் தீண்டா வனம், வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ, பிரிவுழல் காதை, மது மணக்கும் பாதை போன்றவை சில உதாரணங்கள். தலைப்புகள் கவிதைகளுக்கு மற்றொரு பரிமானத்தை அளிக்கின்றன.
கோட்டோவியங்களும் நூலில் இடம் பெற்றுள்ளன. அவை அளிக்கும் உணர்வுகள் தனித்துவமானவை. பார்க்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு உணர்வுகளை அளிக்கக்கூடும். இவை நூலை வெகுமதியாக மாற்றுகிறது. இவ்வோவியங்களை இடம் பெறச் செய்த வாசகசாலை பதிப்பத்திற்கு பாராட்டுகள். நூலின் அட்டைப்படமும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.
நூலின் தலைப்புக் கவிதையுடன் முடித்துக் கொள்ளலாம்.
"ஒவ்வொருமுறை
நான் ஒரு பிரியத்தை
கணநொடியில் தவறவிடும்போதும்
துளித்துளியாய் ஊறுகிறது
எனக்கு பாத்தியப்படாதொரு காழ்வை
உரிமைப்படாதவற்றை
இசைக்கப் போகிறோம்
எனத் தெரிந்தே
துளையிடத் தலை கொடுக்கும்
மூங்கிலுக்கும்
உனை நேசிக்க முடிவெடுத்த
எனக்கும்
எந்த வித்யாசமும் இல்லை
எந்த மலரும் அதன் மரத்திற்கு மட்டுமே
உரித்தானதல்ல
மேலும் மலர் என்பது
எல்லா நேரங்களிலும்
வெறும் மலராக மட்டுமே
இருப்பதுமில்லை
சுகந்தச் சுவையே
நான் விலகும்போதெல்லாம்
துடிக்கும் வேலமுள்
குழலூதும் விரகதாளம்
நீ
என் காதலூறிக் கனியவே
விதிக்கப்பட்ட காழ்வை"
கவிதைகளின் ஒவ்வொரு சொல்லும் பலபட்டைகள் கொண்ட வைரம்போல பளபளக்கிறது. அதன் பொருளை எண்ணும்போதும், அது அடுத்த சொல்லுடன் இயைபு கொள்ளும்போதும் ஒரு பரவசம் தோன்றுகிறது. நூலின் கவிதைகள் எத்தனை முறை படித்தாலும், எப்போதும் பழசாக ஆகாது என்றே தோன்றுகிறது.
கவிஞர் மித்ரா அழகுவேல் தொடர்ந்து எழுதவேண்டும். இவரது கவிதைகள் இன்னும் கவனம் பெறவேண்டும். வாழ்த்துகள் மித்ரா.
கருத்துகள்
கருத்துரையிடுக