குருதியின் வழித்தடம்
நூல் : குருதிவழி
ஆசிரியர்: சுனில் கிருஷ்ணன்
பதிப்பகம் : யாவரும்
நாவலில் எதைக் கருப்பொருளாக கொள்ளவேண்டும், அதன் வடிவம் எப்படி இருக்கவேண்டும், அதன் மொழியும் கூறுமுறையும் எதை உணர்த்தவேண்டும் என்பதெல்லாம் ஆசிரியனின் திட்டமிடலையும் உள்ளுணர்வையும் சார்ந்த விசயம்.
வாசகனின் பணி என்பது அதனுள் உள்ளவை பொருத்தமானதாக உள்ளதா இல்லையா என்பதை அறிவதும் தன்னை உள்ளிழுத்துக் கொள்கிறதா அல்லது வெளித்தள்ளுகிறதா என்பதை உணர்வதும்தான்.
வாசகனை உள்ளிழுத்துக் கொள்ளும் நாவலே நல்ல நாவல் மற்றவை சரியில்லாதவை என்றும் கூறிவிடமுடியாது. சில நாவல்கள் வாசகனை வெளியே நிறுத்தவேண்டும் என்று திட்டமிட்டே எழுதப்படுவதும் உண்டு. எனவே நாவலை முழுமையாக வாசித்து முடித்தபின், அவற்றின் உள்ளே உள்ளவை பொருத்தமானவையாக உள்ளனவா இல்லையா என்பதைப் பற்றி கருத்து சொல்வதே நல்ல வாசகன் செய்ய வேண்டியது என நான் கருதுகிறேன்.
எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் எழுதிய குருதிவழி நாவல், ஊற்றுமுகம், வேல்விழி வெறிப்பு, சதக் சதக், குருதித் தடம் மற்றும் குருதி வழி என ஐந்து பகுதிகளாக உள்ளது.
கண்மாயைத் தூர்வாரும்போது வெளிப்படும் துடியான வேலினால் இரு துர்மரணங்கள் நிகழ்கின்றன. அந்த வேல் யாருடையது அது எப்படி இந்த ஊருக்கு வந்தது அந்த வேலினால் வேறு அசம்பாவிதங்கள் நிகழ்ந்தனவா அல்லது தணிவிக்கப்பட்டதா என்பதை நாவலின் முதல்பகுதியான ஊற்றுமுகம் கூறுகிறது.
நாவலின் முதல் பகுதி மிகவும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. கிராமச் சூழல் விவரிப்பும் எதிர்பாராத துர்மரணங்களை எதிர்கொள்ளும்போது மக்களிடம் ஏற்படும் பதட்டமும், தொடர்ந்து அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் நன்றாக வந்துள்ளன. இறந்தவனின் மனைவியான பொன்னழகி, தன் கணவனின் மரணத்தை நேரில் பார்த்ததால் பிரம்மை பிடித்து அமர்ந்திருக்கும் பாலாயியை பார்த்து புழுங்குவது இயல்பாக உள்ளது. இந்த இடத்தில் பெண்களின் உணர்வு நிலைகள் சிறப்பாக காட்டப்பட்டுள்ளன.
இரண்டாவது பகுதியான வேல்விழி வெறிப்பு, வேல் உரிய இடத்தில் ஊன்றப்பட்டு பல ஆண்டுகளாக திருவிழா எடுத்து கொண்டாடப்படுவதையும் சாமி கொண்டாடியான வேலுச்சாமியின் கதையையும் ஒருங்கே விவரிக்கிறது. இப்பகுதியில் பல கதாப்பாத்திரங்கள் நிறைந்துள்ளன. வேலுச்சாமி மற்றும் அவரது ஒன்றுவிட்ட தம்பி குமார் பாத்திரங்கள் மட்டுமே முழுமையாக உள்ளன. மற்றவை வெறும் பெயர்களாகவே உள்ளன.
இப்பகுதியில் வேலுச்சாமியின் மனைவி கண்ணாத்தா அவரது மகள் சரளா மற்றும் குமாரின் மனைவி சுமதி ஆகிய மூன்று பெண் பாத்திரங்கள் உள்ளன. இப்பாத்திரங்கள் பற்றி சிறுசிறு குறிப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. வாசகன் தன் திறனிற்கேற்ப அவற்றை வளர்த்தெடுத்துக் கொள்ளலாம்.
மூன்றாவது பகுதி "சதக் சதக்" மிகு கற்பனை வடிவில் அமைந்துள்ளது. குன்றக்குடி பகுதி பனிப்பிரதேசமாக மாறி விட்ட காலம். வெளிநாட்டினர் பனிமலை ஏற்றத்திற்காக இங்கு வருவதும் பிரமாண்ட வேலினை கண்டெடுப்பதும் சுவாரசியமான வாசிப்பை அளிக்கிறது.
கால எந்திரம் மூலம் கடந்தகாலத்திற்கு சென்றால் வரலாற்றை மாற்ற முடியுமா என்ற கேள்விக்கு விடை கண்டடைவதே இப்பகுதியின் முதன்மை நோக்கம் எனக் கொள்கிறேன். அதாவது காந்தியின் கொலையை தடுத்திருந்தால், சர்வாதிகாரி ஆவதற்குமுன் ஹிட்லரை கொன்றிருந்தால் வரலாறு மாறியிருக்குமா, இவைதான் கேள்வி. அதற்கான விடை மிகவும் தர்க்கப்பூர்வமாக சிறப்பானதாக அமைந்துள்ளது.
உஜ்ஜயினி நகரில் நிகழ்வதாக வரும் பகுதிகள் நன்றாக வந்துள்ளன. சூலத்தையும் வேலையும் ஒப்பிட்டுக் கொள்வதும் இடுப்பில் உள்ள எடையற்ற வேல் எடையேறி கூர்மை கொள்ளும் இடங்களும் சிறப்பு.
நான்காவது பகுதியான குருதித்தடம், வேலுக்குரியவர் இறப்பதற்கு காரணமானவரின் வாரிசுகளின் வாழ்க்கையை காட்டுகிறது. யாரோ முன்னோர் செய்த ஏதோவொரு தகாத காரியத்தால் அவர்களின் ஏதுமறியாத வாரிசுகளின் வாழ்க்கை பாதிக்கப்படுவது நியாயமா. இதில் என்ன சிக்கல் என்றால் எந்த முன்னோர் எந்த பழியைச் செய்தார் என்பதையும் அதனை எப்படி நிவர்த்தி செய்வது என்பதையும் இவர்களே தேடிக் கண்டடைய வேண்டும் என்பதும், கண்டடைந்தபின் அந்த எதிர்தரப்பு வாரிசுகளிடம் சென்று நடந்தவற்றை விவரித்து பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்பதும்தான்.
தம் முன்னோர் பாவம் செய்திருப்பார்கள் என ஏற்றுக் கொள்வதே முதல் படி. ஆனால் அதுவே மிகவும் கடினமான ஒன்று. அதெப்படி எம்முன்னோரை பாவிகள் என கூறமுடியும். அவர்கள் பாவிகளென்றால் நாங்களெல்லாம் பாவிகள் வழி வந்தவர்களா என மனம் குமையும். அகந்தை துள்ளிக் குதிக்கும். ஆனால் நடக்கும் சம்பவங்களெல்லாம் தவறாக நடந்த ஏதோவொன்றை சுட்டிக் காட்டுவனவாக இருக்கும். எந்தப் பக்கமும் நகரவியலாத இக்கட்டை அடையும்போதுதான் ஆம் எம்முன்னோர் ஏதோவொரு பிழை இயற்றியுள்ளார்கள் என மனம் ஏற்கும். இந்த நிலையை எட்டிவிட்டால் அடுத்த அடிகளெல்லாம் சற்று சுலபமானதுதான்.
தேடவேண்டும் எனும் எண்ணம் எழுந்துவிட்டால் போதும். தேடுவதை நோக்கி ஓரடி முன்னேறிவிட்டதாகத்தானே பொருள்.
நாவலின் இந்தப் பகுதியில் மூன்று அண்ணன் தம்பிகளின் வாழ்க்கை காட்டப்படுகிறது. அவர்கள், தங்கள் குடும்பத்தில் ஏதோ தவறாக நிகழ்கின்றன என்பதை அறிவதற்குள்ளாகவே அவர்களின் பாதி வாழ்நாட்கள் தீர்ந்துவிட்டன. அதன்பின் எப்படி அவர்கள் தங்கள் அய்யாவின் வாழ்க்கையை அறிய முற்படுகிறார்கள் என்பதை இப்பகுதி விவரிக்கிறது.
கலை, நடைமுறை வாழ்க்கைக்கு தருவதென்ன, அதன் அவசியமென்ன என்பது பற்றிய விவாதம் இந்தப் பகுதியில் உள்ளது. இந்த விவாதம் அண்ணன் தம்பிகளான அரசியல்வாதி சேகருக்கும் கவிஞன் சோலைக்கும் இடையே நடப்பதாக வைக்கப்பட்டிருந்தாலும் நாவலாசிரியரின் மனதில் எழும் அல்லாடலாகவே இதைக் கொள்ளலாம்.
நாவலின் இறுதிப்பகுதி "குருதி வழி" ஒரு குற்றவாளியின் வாக்குமூலமாகவே அமைந்துள்ளது. வேலுக்குரியவர் இறக்க காரணமாக இருந்த சுடலையின் தன் கூற்றாக இப்பகுதி உள்ளது. எனவே நாவலின் அனைத்துக் கண்ணிகளும் இதில் இணைகின்றன.
இப்பகுதியை வாசிக்கும்போது முற்பகுதிகளில் வாசித்தவற்றை ஆங்காங்கே பொருத்திக் கொள்ள வேண்டியுள்ளது. முற்பகுதிகளில் வாசித்தவை அவ்வப்போது நினைவில் எழுந்து ஆங்காங்கே பொருந்தி வருவதை வியந்தபடியே வாசிக்க சுவாரசியமாக உள்ளது.
மொத்த நாவலையும் தொகுத்துக் கொள்ள இப்பகுதி உதவுகிறது. பல வரலாற்று தருணங்களை புனைவாக மாற்றியுள்ளார் சுனில் கிருஷ்ணன். வெள்ளையர்களின் கீழ் காவலராக பணி புரிந்தவரின் வாக்குமூலம் என்பதால் அவர்கள் கிராம மக்களிடம் நிகழ்த்திய வன்முறையை நுணுக்கமாக விவரித்துள்ளார். அந்த மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை உணர்வுப்பூர்வமாக காட்டியுள்ளார்.
குருதிவழி நாவலை முழுவதுமாக வாசித்தபின் மனதில் எஞ்சும் உணர்வென்ன என்று எண்ணிப் பார்க்கிறேன். எப்போதோ யாரோ செய்த தவறுக்காக சிலர் பலியாவதும் பல்வேறு துயரங்களை எதிர்கொள்வதும் நிகழ்கிறது. இது சரிதானா என்பது பற்றி கேள்வி எழுப்பினால் பதிலை அடையவே முடியாது. ஆனால் அப்படித்தான் நிகழ்கிறது என்பதை உணர்ந்து கொள்ளமுடியும். இதை ஒரு கருத்தாகக் கூறாமல் புனைவுவழி காட்ட சுனில் கிருஷ்ணன் முயன்றுள்ளார்.
இந்நாவலின் முதல் பகுதியும் ஐந்தாவது பகுதியும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. இரண்டு பகுதிகளும் என்னை உள்ளிழுத்துக் கொண்டன. இறுதிப் பகுதியில் ஆங்கிலேயரின் கீழ் பணியாற்றும் இந்திய வீரர்களின் மனவுணர்வுகள் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன.
அப்போது நடந்ததாக கூறப்படும் அப்பாவி மக்கள் மீதான துன்புறுத்தல்கள் உண்மையில் நிகழ்ந்தவை என அறியும்போது மனம் கனக்கிறது. எவனோ ஒரு வெளிநாட்டுக்காரனின் ஆணைக்காக நம்மக்களையே துன்புறுத்தும் காவலர்களின் அடிமைத்தனம் அருவெறுக்க வைக்கிறது.
நாவலின் மூன்றாம் பகுதியான "சதக் சதக்" சுவாரசியமான வாசிப்பின்பம் அளித்தாலும் நாவலுக்குள் பொருந்தாததாக எனக்குத் தோன்றுகிறது. இந்நாவலுக்குள் அப்பகுதியை வைத்தது நாவலாசிரிநரின் உள்ளுணர்வு சார்ந்தது. ஆனால் என்னால் அதை உணர்ந்துகொள்ள முடியவில்லை.
நாவலின் இரண்டு மற்றும் நான்காம் பகுதிகள் நல்ல பிரக்ஞைபூர்வமாக எழுதப்பட்டுள்ளது. அதனால்தானோ என்னவோ அதனுடன் ஒட்ட முடியாமல் மனதை வெளியே தள்ளுகிறது. மொழியும் புனைவு மொழியாக இல்லாமல் கட்டுரை படிப்பது போன்ற அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதுவும் அந்த அண்ணன் தம்பிகளுக்கிடையேயான அடுத்தடுத்த விவாதங்கள் போதுமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இவை நாவலின் பேசுபொருளுக்கு தொடர்பானதாகவும் இல்லையென்பதும் காரணமாக இருக்கலாம்.
இந்தக் கட்டுரையை முடிக்கும்போதும் மனதில் ஒரு கேள்வி எஞ்சியுள்ளது. நாவலின் முதல் பகுதியில் துர்மரணமடையும் கள்ளங்கபடமற்ற சுப்பையாவும் பாலாயியும் இதற்குள் எப்படி வருகிறார்கள். இதுவும் அவர்களது முன்னோரின் ஏதோவொரு வினைக்கான விளைவுதானோ... அப்படித்தான் நாவலாசிரியர் உணர்த்த முயன்றுள்ளார் என மனதை தேற்றிக் கொள்கிறேன்..
மொத்தத்தில் நாம் வாழும் வாழ்க்கை முன்னோர்கள் செய்யும் செயல்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது. போலவே, இப்போது நாம் செய்யும் எந்தச் செயலும் நம் வாரிசுகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றை கருத்துகளாக இல்லாமல் புனைவாக ஆக்கி நம்மை உணரவைத்துள்ளார் சுனில் கிருஷ்ணன். வாசிக்கும்போது இந்நாவல் கலவையான உணர்வுகளை ஏற்படுத்துகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக