காதலில் திளைத்தல்

 

நூல்: கள்ளினும் இனிய (காமத்துப்பால் குறும்பத்திகள்)

ஆசிரியர்: யாத்திரி

பதிப்பகம்: வாசகசாலை

ஏறக்குறைய 1700 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள் தமிழின் முதன்மையான நூல்களில் ஒன்று. தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களுக்கு பிற்பட்டது என அறிஞர்களால் கருதப்படுகிறது.

    தமிழர் வேதம் என சிலரால் அழைக்கப்படும் திருக்குறள் சமண முனிவரால் எழுதப்பட்டது. பதினெண்கணக்கு நூல்களில் முதன்மையான நூல். இந்நூலுக்கு பரிமேழலகர், மணக்குடவர் தொடங்கி ஏராளமான அறிஞர்களும் பேராசிரியர்களும் உரை எழுதியுள்ளார்கள். தற்போது,  திருக்குறளுக்கு உரை எழுதுவதன் மூலம் தமிழ்மொழி வாழும்வரை தங்கள் பெயரும் வாழும் என்ற நப்பாசையில் பலரும் எழுதுகிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது.

   திருக்குறளுக்கு தற்போது எழுதப்படும் பெரும்பாலான உரைகளில் உரையாசிரியரின் பெயர் மட்டுமே மாறியுள்ளது. உள்ளே உள்ளவற்றில் எந்த மாற்றமும் இருப்பதில்லை.  தமிழர்கள் ஒவ்வொருவரும் அலங்காரப் பொருள்போல தங்கள் வீடுகளில் திருக்குறள் இருக்க வேண்டும் என விரும்புவதாகவும் தோன்றுகிறது. எனவே பதிப்பகங்கள் நூலின் அட்டையை வித்தியாசமாக வடிவமைத்து மக்களை வாங்க (வாசிக்க அல்ல) வைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன. நிற்க.

    திருக்குறளில் அறம், பொருள் மற்றும் இன்பம் என்று மூன்று பகுதிகளாக 133 அதிகாரங்கள் உள்ளன. என்றாலும் தமிழ்நாட்டின் பாடநூல்களில் அறம் மற்றும் பொருள் அதிகாரங்களில் இடம் பெற்றவை மட்டுமே இடம் பெற்றுள்ளன. இன்பம் எனும் அதிகாரங்களில் பேசப்படும் பொருள் குறித்து ஒரு குறிப்பைபைக் கூட அளிப்பதில்லை. பள்ளிகளில் இல்லாவிட்டாலும் கல்லூரிகளிலாவது இன்பத்துப்பால் அதிகாரங்களில் உள்ள குறள்களை இடம்பெறச் செய்யலாம் என்பது என் கருத்து.

திருக்குறள் ஒரு மந்திரம். ஒவ்வொரு சொல்லும் வரிசையும் மிகவும் ஆய்ந்தே வைக்கப்பட்டுள்ளன. அவை ஏன் அப்படி வைக்கப்பட்டுள்ளன என்பதை மட்டுமே நாம் யோசிக்க வேண்டுமே தவிர திருவள்ளுவர் எதுகை மோனைக்காக அவசியமில்லாதவற்றை வைத்துள்ளார் அதை நம் அறிவைக் கொண்டு மாற்றலாம் என எண்ணக்கூடாது.

   பொதுவாகக் காணக் கிடைக்கும் ஒரே மாதிரியான உரைகளுக்கு நடுவே வித்தியாசமான உரைகளும் தென்படும். எழுத்தாளர் சுஜாதாவின் உரை சற்று விசித்திரமானது. ஒன்றே முக்கால் அடிக் குறள்களில் சிலவற்றிற்கு ஒருஅடியில் உரை எழுதியுள்ளார். வித்தியாசமாகச் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் மட்டுமல்ல அவர் திருக்குறளை அப்படித்தான் புரிந்து கொண்டுள்ளார் எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

  திருக்குறளை வெறும் நீதிநூல் என்று மட்டும் கருதக்கூடாது, அதுவொரு கவிதை நூலும்தான் என ஆசிரியர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். இக்கருத்தினை நான் ஏற்கிறேன். அதிலும் இன்பத்துப்பால் குறள்கள் சங்கக் கவிதைகளின் நீட்சி என்றே கொள்ளலாம். குறுந்தொகையில் குறைந்தபட்சம் நான்கு வரிகளில் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் திருவள்ளுவர் ஒன்றே முக்கால் அடிகளுக்குள் சங்கக் கவிதை காட்டும் உணர்வுநிலையை கொண்டு வந்துள்ளார்.

   கவிஞர் இசை, இன்பத்துப்பால் குறள்களை வாசிக்கும்போது தனக்கு ஏற்பட்ட உணர்வுகளை "மாலை மலரும் நோய்" என்ற நூலாக எழுதியுள்ளார். அது, மிகவும் சுவாரசியமான வாசிப்பின்பம் தரும் நூலாக உள்ளது.

   இத்தனை பின்னணியோடுதான் கவிஞர் யாத்திரி எழுதியுள்ள "கள்ளினும் இனிய" (காமத்துப்பால் குறும்பத்திகள்)  என்ற நூலை அணுகுகிறேன்.

    கவிஞர் யாத்திரி அடிப்படையில் கவிஞர். அதுவும் இவர் எழுதி நான் வாசித்த அனைத்தும் காதல் கவிதைகளே. இவர் இன்பத்துப்பால் குறள்களுக்கு விளக்கம் அளித்துள்ளார் என்றதும் ஆவல் தோன்ற வாசிக்கத் தொடங்கினேன்.

   கவிஞர் யாத்திரி இன்பத்துப் பாலில் இடம் பெற்றுள்ள குறள்களுக்கு உரை எழுதவில்லை. வாசிப்பனுபவமும்  எழுதவில்லை. மாறாக அக்கவிதை (குறள்) எழுதப்பட்ட சூழ்நிலையை விவரித்துள்ளார். இது மிகவும் சுவாரசியமாக உள்ளது.

     அறத்துப்பால் குறள்களை மையமாக வைத்து திருக்குறள் கதைகள் என்று பலர் எழுதியுள்ளார்கள். அது அந்தக் குறளை புரிந்து கொள்வதற்கு ஒருவேளை வழிவகுக்கலாம். து புறவயமானது. ஆனால், கவிஞர் யாத்திரி இன்பத்துப்பால் குறள்களுக்கு  விவரிக்கும் சூழ்நிலை அக்கவிதை எழுதப்பட்ட உணர்வு நிலையை நமக்கு கடத்துகிறது. இதுவொரு அகப் பயணத்திற்கு இட்டுச் செல்கிறது. 

  உதாரணமாக மிகவும் புகழ் பெற்ற 1094 - வது திருக்குறள் : 

"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்" 

  இக்குறளுக்கு யாத்திரியின் குறும்பத்தி:

இப்போதெல்லாம் நீ என்னைப் பார்ப்பதற்கு கொஞ்சம் அதிகமாகத்தான் வெட்கப்படுகிறாய். நான் பார்த்து ரசித்த பார்வையைத் தேடுகிறேன். நிமிர்ந்து பாரடி. விரித்த கண்களில் உற்று உற்றுப் பார்த்து கதைகள் பல சொல்லும் உன் நூதனங்கள் தேடுகிறேன். கூச்சம் வந்து குடியேறிய உடலில் எதை எண்ணி நாணுகிறாய்? நடந்ததை எண்ணியா? நடக்கப் போவதை எண்ணியா? 'சரி, போ' என்று நான் திரும்பிக் கொள்கிறேன். இப்போது நீ என்னைப் பார்த்து உதடு பிரியாமல் சிரித்துக் கொண்டிருக்கிறாய்தானே! கள்ளச்சி.

   இக்குறும் பத்தி, அந்த நேரத்து தலைவனின் மனவோட்டத்தைக் காட்டுவதாக உள்ளது. இதனை வாசிப்பவர் இதற்கு மேலும் தன் கற்பனையை செலுத்தி நகரலாம். உணர்வுக்குள் ஆழலாம். 

தலைவி கூற்றுக்கு உதாரணமாக 1203 - வது குறள்:

 "நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்

சினைப்பது போன்று கெடும்"

 யாத்திரியின் குறும்பத்தி:

 

நாசியின் மத்தியில் குறுகுறுத்து கண்களில் ஊறிப் புருவத்தில் படர்ந்து தும்மல் வரப் பார்க்கிறது. நீ என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாய், உன் நினைவில் நீ என் புருவத்தை வருடுகிறாய், நாசி நுனியில் முத்தம் வைக்கிறாய், கன்னத்தில் மீசை உரசுகிறாய், இன்னும் கொஞ்சம் என்னை நெருங்கி நினைத்துக் கொள். கண்சொக்கித் தும்மி விட எத்தனிக்கும் அந்நொடி உன்னை யாரோ அழைத்து விட்டார்கள். நீ என்னை நினைப்பதை நிறுத்திவிட்டாய், மூடர்களே, என் தலைவனைத் தனியே விடுங்கள். மதனம் திரண்டு உச்சம் வரும்பொழுதில் புணர்ச்சி நின்றுவிட்டதென்றால் ஏற்படும் உடல் அசவுகரியத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல வந்த தும்மல் முழுமையாக வாராது போவது.

 இந்தக் குறளில் காட்டப்படும் தலைவியின் உணர்வை இதைவிடச் சிறப்பாக விவரிக்க முடியுமா. 

  இப்படி உதாரணங்களாக காட்டத் தொடங்கினால் அத்தனையும் எடுத்து எழுத வேண்டியிருக்கும்.

  திருக்குறள் வாசிப்பையே வேறு வடிவில் இந்நூல் மாற்றிவிட்டது என்றால் மிகையில்லை. எப்போதுமே என் வாசிப்பு தனிமையில்தான். நூலை வாசித்து முடித்த பிறகு பிறரிடம் அந்நூல் பற்றி பகிர்வதுண்டு. ஆனால், ஒரு குறளுக்கான யாத்திரியின் குறும்பத்தியை வாசித்தவுடன் என் மனைவியிடம் சென்று அதைப்பற்றி விவரிக்கத் தொடங்கினேன். இது முதல்முறை என்பதால் அவருக்கே வியப்பு. ஆனால் குறளையும் குறும்பத்தியையும் விவரித்தபின் அவருக்குள்ளும் உற்சாகம் பற்றிக் கொண்டது. மேலும் இரண்டு பத்திகளை வாசித்ததில் அவரது வேலை அரைமணி நேரம் கெட்டது.

   ஏழு வார்த்தைகளுக்குள் ஐந்து உவமைகளைக் கொண்டுள்ள குறள் 1113 எனக்கு மிகவும் பிடித்த குறள்களில் ஒன்று: 

"முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு"

இக்குறளுக்கு யாத்திரி என்ன எழுதியிருப்பார் என ஆவலுடன் புரட்டினேன்.

யாத்திரியின் குறும்பத்தி:

"அப்படி என்ன உன் காதலி பெரிய அழகி? பளிச்சென்று கண்ணைக் கூசும் நிறமில்லை அவள். இளம்பச்சையில் கண்ணுக்கு இதமான ஒருத்தி. பச்சைப் பசும்புல்வெளியை எங்கு கண்டாலும் அவளே நினைவில் எழுவாள். வெள்ளைச் சீருடை அணிந்து சிறுமிகள் வரிசை கட்டி எங்கு நின்றாலும் எனக்கு அவளின் முத்துப்பல் சிரிப்பே முன்வரும். வெறும் தண்ணீரில் மட்டுமே குளித்து வரும் உடலுக்கென்று ஒரு வாசம் உண்டு தெரியுமா! அறுபது சதவிகிதம் தண்ணீரால் ஆன உடலில் மறைந்து கிடக்கும் கடல்வாசம். ஒவ்வொரு நாளும் அவளில்தான் நான் முத்துக்குளிக்கிறேன். முத்துக்குளிக்கையில் நான் தடுமாறாமல் தாங்கிப் பிடிக்கத் தோதாக அவளது வளைமூங்கில் தோள்கள், சரி! மூழ்கி எடுத்த முத்து எது தெரியுமா? மார்பைக் காட்டிலும் கூர்மையான மைபூசிய கண்கள் உச்சத்தில் மேல் சொருகும்போது மிச்சமிருக்கும் வெள்ளைவிழி!"

   வாசித்தவுடன் மனதில் ஒரு பரவசம் தோன்றியது. இவனல்லவோ காதலைப் பாடும் கவிஞன். ஒருகணம் யாத்திரியை மானசீகமாக அணைத்துக் கொண்டேன்.

  இப்படியே எழுதிக் கொண்டு சென்றால் மொத்தத்தையும் எழுதிவிடுவேன். எனவே என் ஆவலைக் அடக்கிக் கொண்டு இறுதிக் குறளுக்கான பத்தியை இறுதியாகக் கொடுக்கிறேன்.

குறள்: 1330

"ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்" 

யாத்திரியின் குறும்பத்தி:

காலையில் தொடங்கிய மனத்தாங்கல் ஒவ்வொன்றாகத் தொட்டுத் தொட்டு பிற்காலத்தில் பயணித்து என்றோ செய்த தவறுகளை எல்லாம் இழுத்து வந்து, முடிந்து போன பிரச்சனைகளைப் புதுப்பித்து நம் சண்டை வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரே வீட்டுக்குள் எதிரெதிராகப் பார்க்கும் போதெல்லாம் முகத்தைத் திருப்பிச் செல்கிறோம். இரவாகிவிட்டது. கட்டிலில் இரு மருங்கிலும் இருவரும் முதுகுகாட்டிப் படுத்து இருக்கிறோம். தூக்கக்கலக்கத்தில் ஒருவரையொருவர் இடித்துக்கொள்ள, "இப்ப எதுக்கு என்கிட்டே வந்து படுத்துருக்குற?" புதியதாக ஒரு சண்டை "இப்ப எதுக்கு என் மேல கால் போடுற?" "இப்ப எதுக்கு கட்டிப்பிடிக்கிற?" "இப்ப எதுக்கு முத்தம் கொடுக்குற?" ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு விதமாக நெகிழ்ந்து எனக்கு வழிவகை செய்து தந்தாய் உதடுகளால் முத்தமிட்டுக்கொண்டே கைகளால் தள்ளும் வித்தையில் நீ வித்தகி கறாராகச் சொன்னாய், "இப்ப சம்மதிச்சுட்டேன்றதுக்காக சண்டை தீர்ந்ததுனு அர்த்தமில்ல. சரியா?"

 "சரி"

  மனதை நெகிழ்வால் நிறைத்த சில திரைப்படங்களின் இறுதியில்  வணக்கம் போட்ட பிறகும் நிறைவு தழும்பிவிடுமோ என்ற ஐயத்தில் எழுந்து செல்ல தோன்றாமல் அமர்ந்திருப்போமே அதுபோல அப்படியே சில நிமிடங்கள் இருந்தேன்.

கவிஞர் யாத்திரி இந்நூலை எழுதுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனதாக தெரிவித்துள்ளார். மேலோட்டமாக உரை எழுதுவதென்பது வார்த்தைகளின் பொருளை புரிந்து எழுதுவதுதான். அது பாதுகாப்பான எளிய வழி. ஆனால் உணர்வுகளை எழுதுவதென்பது வேறு. இது மலர்களிலிருந்து மீச்சிறுதுளித் தேனை உறிஞ்சும் திறன் கொண்ட கொசு தேங்கிய தேனிற்குள் விழுவதைப்போல. வரபும் சாபமும் ஒன்றேயாகும் நிலை. இந்த இன்பத்துப்பால் குறள்களுக்குள் சிக்கி இப்படிப்பட்ட ஒரு நூலுடன் வெளிவந்தது யாத்திரியின் சாதனைதான். அவருக்கு என் வாழ்த்துகளும் பாராட்டும்.

 நான், இந்நூலை இன்னும் முழுதாக முடிக்கவில்லை. பிற நூல்களைப் போல ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிடும் நூல் அல்ல இது. எவ்வப்போது காதல் உணர்வு நிலைக்கு ஆட்பட வேண்டுமென தோன்றுகிறதோ அப்போதெல்லாம் கவிஞர் யாத்திரியின் "கள்ளினும் இனிய" குறும்பத்திகளை எடுத்து வாசித்து நெகிழ்வில் மூழ்கலாம் ஆழலாம் கரையலாம். காத்திருக்கிறேன்.

 

  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

களிறன்ன நறுமாமலர்

ஆழ்ந்ததால் திரண்டவை

கோர்க்கப்பட்ட பட்டயங்கள்