நிதானமாய் நிகழும் போர்
நூல் : ஸ்டேல்மேட்
ஆசிரியர் : பாலு
பதிப்பகம் : எதிர் வெளியீடு
******
தமிழில் விளையாட்டைக் களமாகக் கொண்டு வெளிவந்த படைப்புகளென அதிகமாக இல்லை. ஜல்லிக்கட்டை களமாகக் கொண்ட சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை விளையாட்டு வகைமைக்குள் வைக்க முடியாது. ஏனெனில் எதிராளி இணையான மனிதனில்லை. சரவண சந்திரன் ஹாக்கி விளையாட்டு வீரர் பற்றிய சிறுகதை எழுதியுள்ளார். இப்போது விளையாட்டு தொடர்பான சிறுகதைகள் எழுதி வருவதாகத் தெரிகிறது. நிதீஷ் கிருஷ்ணாவின் "முன் நகர்வு" சிறுகதைத் தொகுப்பில் இரண்டு கதைகள் செஸ் விளையாட்டை களமாகக் கொண்டது. இவை என் வாசிப்பின் எல்லைக்குள் அறிந்தவை.
இந்த "ஸ்டேல்மேட்" நாவல் செஸ் விளையாட்டை முதன்மைக் களமாகக் கொண்டுள்ளது. சிறந்த செஸ் விளையாட்டு வீரராக இருந்தும் பாதியில் விளையாட்டைத் துறந்தவரின் மகன் செஸ் விளையாட்டை தன் வாழ்க்கையாக தேர்ந்தெடுத்து முன் நகர்வதே இந்நாவலின் மையம் எனக் கொள்ளலாம்.
உடல் திறனை முதன்மையாகக் கொண்டவையே பெரும்பாலான விளையாட்டுகள். அவற்றிற்கும் சமயோசிதமும் சட்டென முடிவெடுக்கும் திறனும் அவசியம்தான். ஆனால் செஸ் விளையாட்டைப் பொறுத்தவரை பொறுமையும் நிதானமும் மிக அவசியம். செஸ் விளையாட்டு வீரர்கள் பார்ப்பதற்கு வெறுமனே அமர்ந்திருப்பதாகத் தோன்றினாலும் அவர்கள் மனதிற்குள் பெரும் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும். அப்படி செஸ் விளையாட்டு வீரனின் மனதிற்குள் நடக்கும் யுத்தத்தை மிக நுணுக்கமாகக் காட்டுகிறது இந்நாவல்.
செஸ் மீதான ஆர்வத்தை உள்ளொடுக்கிக் கொண்டு அக்கவுண்டன்ட் வேலைக்கு செல்கிறான் சுமன். அங்கிருக்கும் அஸ்வின் சுமனின் ஆர்வத்தை மீட்டெடுக்கிறார். தந்தை தடுத்த போதும் சுமன் செஸ்ஸை கைவிட மறுக்கிறான். அவன் ஆர்வத்தைப் பார்த்த தந்தையும் அவனுக்கு உறுதுணையாக இருக்கிறார். அந்த விளையாட்டிற்காக சுமன் எதையெதை இழக்கிறான் கிராண்ட் மாஸ்டர் என்ற இலக்கை நோக்கி எப்படி பயணிக்கிறான் என்பதே கதையென தோராயமாகக் கூறலாம்.
நாவலின் மொழி நேரடியானது. பூடகமாகவோ இருபொருள் மயக்கம் தருவதாகவோ இல்லை. எனவே ஆசிரியர் எதை வாசகன் உணரவேண்டும் என உத்தேசிக்கிறாரோ அதை நிச்சயமாக வாசகன் அடைந்து விடுவான்.
சி. ஏ. படித்துக் கொண்டிருக்கும் இளைஞன் தன் மனதினுள் உள்ள செஸ் விளையாட்டை நோக்கி செல்கிறான். இது செயற்கையாக இல்லாதவாறு பள்ளி நாட்களில் அவனுக்கிருந்த கணித ஆர்வம் கூறப்படுகிறது. லாஜிக்கலாக எல்லாம் சரியாக பொருந்திய நாவல் எனக் கூறலாம்.
மிகச் சிறந்த வீரராயிருந்த சுமனின் அப்பா செஸ் விளையாடாமல் இருப்பதற்கு முன்கதை உள்ளது. சென்னை அண்ணாநகர் அருகே இருபது ஆண்டுகள் வசித்தபோதும் அங்கே ஸ்டிரீட் செஸ் என்று ஒரு வகைமை உள்ளதை இந்நாவலின் இப்பகுதி மூலமே அறிந்தேன். செஸ் மிக நிதானமான ஆட்டம் என்றே கருதியிருந்தேன். இருபது ஓவர் கிரிக்கெட் போல இறங்கி அடித்தல் முறை செஸ்ஸிலும் உண்டு என்பது அவ்விளையாட்டில் ஈடுபாடில்லாத எனக்கு வியப்பளிப்பதாக இருந்தது. எனவே இந்த முன்கதை சுவாசியமானதாக உள்ளது.
நாவலின் வடிவம் சுமன் தன்னிலையில் கூறுவதால் வாசிக்கும்போது ஒரு இளைஞனின் உள்ளும் புறமும் பயணிப்பதாக உணர முடிகிறது. ஆட்டத்தின்போது மனம் கொள்ளும் அல்லாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளன. செஸ் என்பது ஒரு போர்தான். ஆனால் அது நடப்பது இருவரின் உள்ளத்தினுள். ஒரு காயை நகர்த்துவதற்கு முன், அக்காயை நகர்த்திய பிறகு எதிராளி எதை நகர்த்துவான் அதற்குப்பின் தான் நகர்த்த வேண்டியது எது என ஐந்து நகர்வுகளையாவது மனதினுள் கண்ட பிறகுதான் நகர்த்தப்படுகிறது. இதற்கு எத்தனை கணக்கீடுகள் தேவைப்படும். சிந்தனை செய்வதற்கு மூளை திறன் மிக்கதாக மட்டுமல்லாமல் பலமிக்கதாகவும் இருக்க வேண்டும். மூளையை பலமிக்கதாக ஆக்க உடலின் வலிமையை கூட்ட வேண்டும். எனவே, உடலால் ஆடப்படும் விளையாட்டுகளைவிட மனதால் விளையாடப்படும் இவ்விளையாட்டிற்கு உடல் வலிமை இன்னும் முக்கியம். இத்தகவல்கள் எல்லாம் கதைப் போக்கில் வாசகனுக்கு கடத்தப்படுகிறது.
ஷீலா மற்றும் தர்ஷினி என்ற இரண்டு பெண் பாத்திரங்கள் வருகின்றன. ஷீலாவின் பாத்திரம் அனைவரும் அறிந்த சராசரியாக உள்ள நிலையில் தர்ஷினியின் பாத்திரம் இதுவரை வாசித்திராத வகையில் இருக்கிறது. செஸ் விளையாட்டு வீரரின் உள்ளம் கொள்ளும் பதட்டங்களையும் அல்லாடல்களையும் தணிப்பதற்கு இம்மாதிரியான பாத்திரங்களின் உதவி தேவை போலும். இதை அவ்விளையாட்டில் ஈடுபட்டிருப்பவர்களே கூறமுடியும். அந்தப் பாத்திரத்தின் தன்மை வெளிப்படும்போது அட என்ற வியப்பு எழுந்தது உண்மை. செஸ் விளையாட்டை பற்றி அதன் வெற்றி தோல்விகள் வீரர்களை எப்படி பாதிக்கிறது என்பதைப் பற்றி நுணுக்கமான விவரணைகளுடன் விரிவாகக் காட்டியுள்ளார் ஆசிரியர். அவ்விளையாட்டின் பலவித வடிவங்களையும் விவரித்துள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது.
ஒரே மூச்சில் வாசித்து முடிக்குமளவிற்கு சுவாரசியமாகவும் நூறு பக்கங்களுக்குள்ளும் நாவல் உள்ளது. இதனை நாவல் வகைமைக்குள் வைக்கமுடியுமா எனத் தெரியவில்லை. இந்தக் குழப்பம், பக்கங்களுக்காக மட்டுமல்ல கதைக் களனும் சிறு வட்டத்திற்குள் அடங்கியுள்ளதாலும் விரிவான தர்க்கங்களை எழுப்பாததாலுமே.
நாவலின் நிறைகளாக எவையெவை உள்ளனவோ அவையே குறைகளாகவும் கருதப்படலாம். விளையாட்டை நேரில் காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நேரடியான மொழியில் கூறப்படுவதனாலேயே மேற்கொண்டு உள்நோக்கி பார்க்கும் வாய்ப்பு எதுவும் வாசகனுக்கு தரப்படவில்லை. ஒட்டு மொத்தமாக நல்ல வாசிப்பனுபவம் தரும் நாவல் எனக் கூறலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக