மயக்கமளிக்கும் கதைகள்

 

 

 

நூல் : இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்

ஆசிரியர் : பெருந்தேவி

பதிப்பகம் : எழுத்து பிரசுரம்

கவிஞர் பெருந்தேவி என்றே பெயர் மனதில் பதிந்துவிட்டது. அவர், கட்டுரைகளும் குறுங்கதைகளும் மொழி பெயர்ப்பும் எழுதியதும் அந்த முன்னொட்டை விரிவாக்கிக் கொண்டேன். தற்போது சிறுகதைகள் தொகுப்பு வந்துள்ளதால் அதை இன்னும் நீட்ட வேண்டியதாகிவிட்டது.

பெருந்தேவியின் நூல்களில்  எனக்கு மிகவும் அணுக்கமானது "மூச்சே நறுமணமானால்" தான். அக்கமகாதேவியின் பாடல்களின் மொழிபெயர்ப்புதான் என்றாலும் அதிலுள்ள கவிதைகளின் தேர்வும் மொழிபெயர்ப்பும் மனதை நெகிழ வைக்கிறது. என் மனதில் ஆழ்ந்திருந்த இறைவன் மீதான சரணடைதலை இறைஞ்சலை எனக்கே காட்டியது. இந்நூலே ஒருவகையில் என் சரஸ்துதி நூலிற்கு தூண்டுதலாக அமைந்தது என்றும் கூறலாம். நிற்க.. 

"இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்" சிறுகதைத் தொகுப்பில் 12 சிறுகதைகள் உள்ளன. பொதுவாக தொகுப்பிலுள்ள கதைகளில் முதன்மையானதின் தலைப்பே நூலின் தலைப்பாகவும் அமையும். அப்படியில்லாமல் வேறொரு தலைப்பிடும் ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. இந்நூலும் அந்த விதிவிலக்குகளில் ஒன்று. கதைகளின் ஒட்டுமொத்த உணர்வை பிரதிபலிப்பதாக இந்த தலைப்பு அமைந்துள்ளது.

"பாப் சாந்தி" என்ற முதல்  கதையே நூலின் உணர்வு நிலையை வாசகனுக்கு உணர்த்திவிடும் வகையில் உள்ளது. பரிச்சயமில்லாத நபர் நம் நினைவில் இருக்கும் ஒரு நிகழ்வை சரியாக கூறிவிட்டாரென்றால் அவரை நமபத் தொடங்கிவிடுகிறோம். அதன்பின் அவர் கூறும்  நம் நினைவில் இல்லாத நிகழ்வையும் நிகழ்ந்திருக்கும் என்றே ஏற்றுக் கொள்ளும் நிலைக்குச் செல்கிறோம். 

பாப் சாந்தி கதையில் கல்லூரியில் உடன் பயின்றதாகக் கூறிக் கொண்டு சாந்தி என்ற பெண் வருகிறார். வகுப்பில் இரண்டு வரிசைக்குப் பின்னால் அமர்ந்திருந்ததாக் கூறி தனக்கு புனைப்பெயராக பாப் சாந்தி என்று வைத்ததாகவும் கூறுகிறார். நம்புவதா வேண்டாமா என்ற மயக்கத்தில் இருக்கும்போதே கொலை செய்ய முயற்சி செய்கிறாள்.

நம் பால்யத்தில் நடந்த சிறு நிகழ்வுகளை மட்டும் தெரிந்த ஒருவர் பிற்கால வாழ்க்கையில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதற்கான சாத்தியத்தின் எல்லைவரை இக்கதை செல்கிறது. வாசிக்க மிகவும் சுவாரசிமான கதையிது. 

                "மழை நிற்கப்போவதில்லை" என்ற கதை புதுத்தளத்தில் நடக்கிறது. தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் மழையால் ஊர் மூழ்கவும் தப்பித்து மலைமேல் ஏறுகிறான் சந்தானம். மலையில் இருக்கும் ஆலயத்தின் மண்டபத்தில் தங்கியிருக்கிறான். ஆலயத்திற்குள் நுழைந்து பார்க்கிறான். சிற்பங்கள் நிறைந்துள்ளன. அந்தச் சிற்பங்களுக்கும் பொழியும் மழைக்கும் தொடர்பு இருப்பதாக உணர்கிறான்.

இக்கதையும் கனவா நினைவா என்ற மயத்திலேயே நிகழ்கிறது. அந்தக் கோவிலுக்குள் இருக்கும் கிழவருக்கும் சிற்பங்களுக்கும் இருக்கும் தொடர்பு சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. சிற்பங்களைப் பற்றிய விவரணை கதைக்கு ஒரு அமானுஷ்ய தன்மையை அளிக்கிறது.

"ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி" சிறுகதை ஒரு நல்ல ஹைக்கூவை வாசிக்கும் போது ஏற்படும் பரவசத்தை அளிக்கிறது. இத்தொகுப்பின் பிற கதைகள்போல விரிவான களமின்றி ஒரு தாய்க்கும் மகனுக்குமான நடக்கும் உணர்வு ஊசலாட்டத்தை காட்டுவதாக இக்கதை உள்ளது. மகன்களுக்கு அம்மா எப்போதும் அம்மாதான். திடீரென அவளை பருவமங்கையின் இயல்பில் காணும்போது மகனுக்குள் ஏற்படும் தவிப்பு பிரமாதமாக வெளிப்பட்டுள்ளது.

"கேள்விக்கென்ன பதில்" சிறுகதை ஒரு திரில்லர் படத்தைக் காணும் உணர்வை அளிக்கிறது.  கணவனைக் கடத்தியுள்ளதாகக் கூறி "உங்கள் கணவரை மன்னிக்கத் தயாரா" எனக் கேட்கிறார்கள். எதற்காக கடத்தியுள்ளார்கள் எனப் புரியாமல் அல்லாடும் ஒரு பெண்ணின் உணர்வுகளை பெருந்தேவி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அவள் கணவனை மன்னித்தாளா, கடத்தியவர்கள் அவனை விடுவித்தார்களா என்பதை சுவாரசியமான இக்கதையை வாசித்து அறிந்து கொள்ளுங்கள். இக்கதையும் ஒரு மயக்கத்துடன்தான் முடிகிறது.

இந்தத் தொகுப்பின் முதன்மையான கதையென நான் எண்ணுவது "மயானக் கொல்லை". செல்வி ஒரு விபத்தில் உடல் முழுதாக கிடைக்காதவாறு விபத்தில் இறந்த தன் அப்பா அம்மாவிற்காக படையல் வைப்பதற்காக அந்த விழாவிற்கு வருகிறாள். முதல்முறையாக வரும் அவளின் பார்வையில் மயானக் கொல்லை விரிவாகக் காட்டப்படுகிறது. வெளியில் நிகழும் விழாவும் அவளுள் நிகழும் மனவோட்டமும் இயைந்தபடி வருகின்றன.

இக்கதையில் செல்விக்கு கடைசிவரை உடனிருந்து உதவும் கொண்டைக்காரம்மா பாத்திரத்தை  பெருந்தேவி அத்தனை அணுக்கமாக படைத்துள்ளார். மொத்தத் தொகுப்பிலும் என் மனதில் உயர்ந்து நிற்கும் பாத்திரமாக  கொண்டைக்காரம்மாவே திகழ்கிறார். முன்பின் தெரியாதவருக்கு இப்படி உதவுபவர்கள்தான் மனிதத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். இக்கதை எந்தவித மயக்கமும் இல்லாமல் யதார்த்தவாத கதையாகவே உள்ளது. தொகுப்பின் முதன்மையான கதையெனத் தோன்றுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மற்ற கதைகளுமே வெவ்வேறு களங்களில் விதவிதமான மனநிலைகளைக் காட்டுகிறது. அதில் குறிப்பிடப்பட வேண்டியவை "அப்பாவுக்குச் சென்னை பிடிக்கவில்லை" மற்றும் "அந்த பத்தொன்பதாம் நூற்றாண்டுக்காரி"

ஒட்டு மொத்தமாக "இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்" நூல் மிகச் சிறப்பான வாசிப்பனுபவம் அளிக்கும் தொகுப்பாக உள்ளது. மயக்கமளிக்கும் கதைகள் எனக் கூறுவதால் மாயயதார்த்தவாத கதைகளோ என எண்ண வேண்டியதில்லை. யதார்த்தவாதமே சற்று எல்லை மீறினால், மிகையானால் எப்படியிருக்கும் என எழுதிப் பார்த்த கதைகள். குறுங்கதைகளை சற்று விரிவாக்கியது போலவும் தோன்றுகிறது. சில கதைகள் அம்முடிச்சை வலிந்து எழுதியதுபோலத் தோன்றினாலும் நல்ல வாசிப்பனுபவம் அளிக்கும் தொகுப்பு.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

களிறன்ன நறுமாமலர்

ஆழ்ந்ததால் திரண்டவை

கோர்க்கப்பட்ட பட்டயங்கள்