ஞானத்தை நோக்கிய பயணம்

 

 

நூல் : சங்கிலி பூதம்

ஆசிரியர்: போகன் சங்கர்

வெளியீடு: வான்கோ பதிப்பகம்  

   எழுத்தாளர் போகன் சங்கரின் "பூ" சிறுகதையை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் வாசித்தபோதே அவர்மேல் பிரியம் தோன்றிவிட்டது. "பூ" சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. பிறகு "கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்" தொகுப்பை வாசித்தபோது அதில் மேலும் சில நல்ல கதைகள் இருந்தாலும் பூ கதையை விஞ்சவில்லை. அத்தனை நேர்த்தியாக எந்தக் பிசிறுமின்றி அக்கதை எழுதப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை "பூ" கதைதான் போகன் சங்கரின் "மாஸ்டர் பீஸ்".

    கடந்த வருடம் இவரது குறுங்கதைகள் தொகுப்பான "பிரேமக்கை" வாசித்தேன். அவர் முகநூலில் எழுதி ஏற்கனவே வாசித்தவற்றின் தொகுப்புதான்.  வாசித்தவுடனேயே உற்சாகத்துடன் விருப்பக்குறியோ இதயக்குறியோ இட்டுவிட்டவைதான். படித்து மறந்த ஒருசில கதைகள் புதுப் பரவசத்தை அளித்தன. ஆனால்,  நினைவில் இருந்தவற்றை  திரும்பவும் வாசித்தபோது பெரிதாக எந்த உணர்வையும் ஏற்படுத்தவில்லை. இதனை  குறுங்கதைகளின் பலவீனம் எனக் கூறலாம். நிற்க. 

     இப்போது வாசித்த  "சங்கிலி பூதம்" போகன் சங்கரின் ஒன்பதாவது  கவிதைத் தொகுப்பு. பின்னட்டைக் குறிப்பில் "கோழையும் தீரனுமான கடைந்தெடுத்த மடையனும் ஞானியுமான இன்னொரு கவிஞனின் மற்றுமொரு கவிதை நூல்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

     இந்தத் தொகுப்பை வாசித்து முடித்தபோது முதல் முன்னொட்டான கோழையும் தீரனுமான கவிஞனின் முகம் காணக் கிடைக்கிறது. ஆனால் கடைந்தெடுத்த மடையனும் ஞானியும் இருக்குமிடத்தை என்னால் அறிய முடியவில்லை. அதற்கு பதிலாக அறிவின் துணையுடன் ஞானத்தை நோக்கிய பயணத்தில் இருப்பவரை தொகுப்பு முழுவதும் காணமுடிகிறது.  

   சங்கிலிபூதம் தொகுப்பில் பல கவிதைகள் தெய்வத்தை வரையறுக்க அல்லது புரிந்துகொள்ள முயல்கின்றன. அத்தனையுமே சிறப்பான கவிதைகளாகவும் உள்ளன. உதாரணமாக மூன்று வித தெய்வங்களைப் பற்றி விவரிக்கும் "66" கவிதை. 66 கவிதையின் தலைப்பல்ல, வரிசை எண்.  

"உலகில் மூன்றுவித தெய்வங்கள் உண்டு. ஏமானுக்கும் அருளி

ஏழைக்கும் அருளும் தெய்வம். ஜட்ஜுக்கு மட்டும் அருளி டவாலியைக் கண்டுகொள்ளாத பட்சபாத தெய்வம் ஒருவிதம்.

பல்லக்குத் தூக்கிக்கு மட்டுமே அருளும் தீனதயாள தெய்வம் இன்னொருவிதம்"  

   இது மூன்றுவித தெய்வங்களைப் பற்றிய வரையறை. இதைக் கூறுவதற்கு கவிஞர்  தேவையில்லையே அனைவருக்கும் தெரிந்ததுதானே என சிலர் கூறலாம். கவிஞர் தனக்கு மட்டுமே புலப்பட்ட நான்காவதைக் கண்டறிகிறார். 

   "அது இருவருக்கும் அருளாத மூகதெய்வம். சொல் எனும் மொழி தெய்வம்"

  யாருக்கும் அருளாது நிலைத்திருக்கும் தெய்வம். விழைபவர்கள் தாங்களே தங்களுக்குத் தேவையானதை உருவாக்கிக் கொள்ள வேண்டியதுதான், அவரவர் கொள்கலனிற்கேற்ப. இதை ஒரு கவிஞரால்தான் உணர்ந்து கூறமுடியும். 

    ஒருவேளை உணவிற்கும் வழியில்லாத ஒருவன் எல்லா மதத்து தெய்வங்களையும் போஷிப்பதைப் பற்றி ஒரு கவிதை உள்ளது. எதுவும் தராதபோது எல்லா தெய்வங்களும் சமம்தானே. எல்லாவற்றையும் ஒரே தராசில்தானே வைக்கவேண்டும். "2" -ம் எண் கவிதையின் கடைசி வரிகளை வாசித்தபோது ஒருகணம் சிலிர்ப்பெழுந்தது.  

  "பீடியை பற்றவைக்க முடியாது

அவன் கைகள் நடுங்கின.

நான் உதவி செய்தேன்

அவன் பற்ற வைத்துக்கொண்டு

உள்பக்கம் திரும்பி

கணேசா பீடி வேணுமா?

அவன் எந்த தெய்வத்தையும் கைவிடவில்லை" 

  இதிலென்ன இருக்கிறது என எண்ணுபவர்கள் முழுக்கவிதையையும் வாசிக்கும்போது உணர்வார்கள்... தன்னிடம் ஏதுமில்லாதிருந்தபோது புசிக்கக் கிடைக்கும் ஒன்றை தெய்வத்திற்கும் படைக்க எண்ணும் ஒரு கள்ளமற்ற தூய உள்ளத்தை.

  70 -ம் எண் கவிதை கடவுளைப் போல நடந்து கொள்ளும் மனிதர்களையும் கடவுளைப்போல் இல்லாத கடவுள்களையும் பற்றி பேசுகிறது.

 ஒரு துக்கத்தை பகிர்ந்து கொள்வதற்கான இடம் கிடைப்பதுதான் இந்த நவ உலகில் மிகவும் அரிதாக உள்ளது. யாராவது ஒரு மனிதர் நமது துக்கத்திற்கு செவி கொடுத்து ஆறுதல் சொல்வாராயின் அவர் தெய்வத்திற்கு ஒப்பானவர்தான். எத்தனை முறை முறையிட்டாலும் செவியில் கேட்காதவாறு நடந்து கொள்ளும் தெய்வத்தைவிட மேலானவர்தான். இதனை அழகான கவிதையாக்கியுள்ளார் போகன் சங்கர். 

   அவ்வப்போது  பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் நிகழ்த்தப்படும் வன்முறைகள் பற்றி கேள்வியுறும் போதும் மனதில் அரற்றல் எழுகிறது. தெய்வம் என்பது உண்டா. அப்படி இருந்தால் இவ்வாறு நிகழுமா என.

  இந்த அரற்றலின் தொடர்ச்சியாக 71- ம் எண் கவிதை அமைந்துள்ளது.  

  கடவுள் எனும் சைக்கோபாத் எந்தெந்த இடங்களில் தன் இருப்பை நிறுவுகிறார் எனத் தொடங்கும் கவிதை அவர்  மாபெரும் பொறுமையாளன்  என முடிகிறது. ஆனால்,  வாசித்து முடிக்கும்போது கடவுள் மாபெரும் சைக்கோபாத்தான் என மனதிற்குள் ஓர் முழக்கம் எழுகிறது.

"கடவுள் மாபெரும் பொறுமையாளன்

குழந்தைகளையும் பெண்களையும்

தேடித் தேடி

பூமியில் சைக்கோபாத்கள்

கொல்லும்போது

நியாயத் தீர்ப்பு நாளில்

பார்த்துக் கொள்ளலாம் என

பொறுமையாகக் காத்திருப்பவன்"

 

   75 - ம் கவிதை நமக்கென்ன தெரியும்? என முடிகிறது. அதன் காரணமாகவே மனதில் இக்கவிதை வளர்ந்து பேருருக் கொள்கிறது.

 தெய்வம் முக்கியமல்ல கும்பிடும் மனநிலைதான் முக்கியம் என ஒரு பெண் கூறும்போது வணங்காத தெய்வம் இருக்கமுடியுமா. அப்படி இருந்தால் அது தெய்வம்தானா. பல்வேறு கேள்விகளை மனதில் எழவிட்டு கவிஞர் ஒதுங்கிக் கொள்கிறார்.

    இக்கவிதைகளை வாசித்ததும் இதுவரையிலான தெய்வத்தின் மீதான வரையறைகளையும் கற்பிதங்களையும் நாம் உணர்ந்தவற்றையும் ஒன்றுடன் ஒன்று பொருத்தியும் விலக்கியும் விளக்கியும் மனதிற்குள் பெரும் ஆடல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது முடிவின்றி. 

   தெய்வம் பற்றிய கவிதைகளை தவிர்த்து சிறப்பான கவிதைகளில் ஒன்றாக 88- ம் கவிதை உள்ளது.

   ஒவ்வொருமுறை அவமானப்படுத்தும்போதும் அல்லது நிராகரிக்கும்போதும் பெரிதாக சேதம் ஆகாததுபோன்ற பாவனையுடன் அவர்களிடம் வழிந்து நிற்பவன் ஒருமுறை நிமிர்கிறான். ஒரு ஹீரோயிக் தருணத்தை சிறப்பான கவிதையாக்கியுள்ளார் போகன்.  

"மீண்டும் ஒருமுறை தள்ளப்பட்ட குழியிலிருந்து எழுந்துகொண்டு விழுந்த தொப்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு கலைந்த ஒப்பனையைச் சரிசெய்துகொண்டு கிழிந்த ஆடையை மறைத்துக்கொண்டு கசியும் குருதியைத் துடைத்துக்கொண்டு ஒரு அசட்டுச் சிரிப்புடன் எதுவும் நிகழ்ந்திராத பாவனையுடன் உங்கள் கைகளைப் பற்றிக் குலுக்கியிருக்கலாம்தான்.

இம்முறை அவ்வாறு செய்யவில்லை" 

  இவ்வாறு ஒவ்வொரு முறையும் எழ நினைத்தும் முடியாமல் உள்ளுக்குள் புழுங்கியபடி வாழ்பவர்கள் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு அடுத்த கவிதையை நோக்கி நகரவேண்டியதுதான்.

   50 மற்றும் 53 ம் கவிதைகள் தன்னாய்வுக் கவிதைகள். கவிஞர் தன்னையே சுய விமர்சனம் செய்து கொள்வதாக உள்ளது. கைதவறி உடைத்த விஷயங்களை திரும்ப ஒட்ட முயற்சிக்கும்போது நிகழ்வதை 50 - ம் கவிதையில் விவரிக்கிறார். இதன் தொடர்ச்சியாக  தன்னை உடைப்பதும் காப்பதும் அற்பமான விசயங்களே என அங்கலாய்ப்பதாக 53- ம் கவிதை உள்ளது. இவை தனிப்பட்ட கவிஞர் போகன் சங்கருக்கு மட்டும் நிகழ்வதல்ல, உலகின் பெரும்பாலான கலைஞர்களுக்கும் நிகழ்வதுதான் எனத் தோன்றுகிறது.

"அற்பமான விஷயங்களுக்கே அளவெடுத்துத் தைத்ததுபோல் என் வாழ்க்கை இருக்கிறது.

நான் மாபெரும் கட்டடம் ஒன்றுக்குள் தனது நூறு கால்களாலும் ஏறி வந்ததும் நசுக்கப்படும் ரயில் பூச்சிபோல் இருக்கிறேன்"  

   கவிதையைப் பற்றி சில கவிதைகள் உள்ளன. அவை மிகவும் ரசிக்கத்தக்கனவாக உள்ளன. அத்துடன் நூலில் ஒவ்வொரு கவிதைக்கும் கோட்டோவியங்கள் இடம் பெற்றுள்ளன. இவை கவிதைகளை மீண்டும் வாசிக்கவும் மனதிற்குள் ஓட்டிப் பார்க்கவும் தூண்டுகின்றன.  பதிப்பாளருக்கு பாராட்டுகள். 

     சங்கிலி பூதம் நூல் பற்றி விமர்சனமாக ஒன்றைக் கூறத் தோன்றுகிறது. கவிதை நூல் என்ற வகைமையின் கீழ் இந்நூல் உள்ளது. ஆனால் இதில் பல குறுங்கதைகளும் இடம் பெற்றுள்ளன. கவிதை மொழியில் குறுங்கதைகளை எழுதலாம். ஆனால் அதை கவிதை எனக் கூறமுடியாதல்லவா.

   உதாரணமாக  எண் 72

 "வருடக் கணக்கில்

காலையில்

ஒரே நேரத்தில் வந்து

ஒரே உணவை

மவுனமாகச் சாப்பிட்டுப் போய்க்கொண்டிருந்த வாடிக்கையாளர்

திடீரென்று பேசத் தொடங்கும்போது

பரிசாரகன்

சற்றே குழம்பிப் போகிறான் தெருவெங்கும் ஒட்டப்பட்டிருக்கும்

ஒரு அஞ்சலி போஸ்டரில் சிறிதாய்

அவர் முகம் தெரியும்போது இன்னும்.."

     இது வாக்கியத்தின் சொற்களை ஒன்றின் கீழ் ஒன்றாக அடுக்கி எழுதிய  நல்ல குறுங்கதைதானே தவிர கவிதையில்லை என நான் கருதுகிறேன். இதுபோல பத்திற்கும் மேற்பட்டவை உள்ளன. இவை வாசிக்க சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் கவிதை என்று வகைப்படுத்த முடியாதென்பதே என் கருத்து.

   முத்தாய்ப்பாக ஒரு கவிதையை கொடுத்து முடிக்கலாம் என எண்ணியபோது மனதில் எழுந்த கவிதை இது:

 //கடவுளை

 "சார்!” என்றழைக்கும்

நபர் ஒருவரை

வாழ்வில்

முதல் முறையாக

ஒரு கோவிலில் பார்த்தேன்.

சார்

முடியும்னா முடியும்னு சொல்லுங்க

முடியலைன்னாலும் முடியலைன்னு

சொல்லுங்க.

நான் பாட்டுக்கு தினம் வந்து முட்டிக்கிட்டு இருக்கேன்.

ஏன் வரேன்னே தெரியலை சார்!" என்றவர்

என் பார்வையை உணர்ந்து சற்றே கம்மிய குரலில் கடவுளுக்கும் எனக்கும் பொதுவாகச் சொன்னார்.

 "முடியலை சார்!”//

     எளிய மனிதர்களுக்கு கடவுள் எத்தனை அவசியமானவராக உள்ளார் என்பதை எவ்வளவு அழகாக இயல்பாக கவிதையாக்கியுள்ளார் போகன் சங்கர். சிறப்பு.

 இதுவும் தெய்வத்தைப் பற்றிய கவிதை என்பதோடு தொகுப்பின் முதல் கவிதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

   நல்ல வாசிப்பனுபவம் அளிக்கும் கவிதைத் தொகுப்பு. நன்றியும் வாழ்த்துகளும் போகன்.

 

 

 

 

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

களிறன்ன நறுமாமலர்

ஆழ்ந்ததால் திரண்டவை

கோர்க்கப்பட்ட பட்டயங்கள்