புதிய களங்களின் பரவசம்
( வாசகசாலை பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ள இளம் எழுத்தாளர் நிதீஷ் கிருஷ்ணாவின் சிறுகதை தொகுப்பான "முன்நகர்வு" நூலிற்கு எழுதிய முன்னுரை)
வாசிப்பின் இன்பம் என்பதே புதுப்புது நிலங்களையும் களங்களையும் அறிவதும் வாசிக்கும் வரையில் அங்கு மானசிகமாக வசிப்பதும்தான். இப்போது மொழிபெயர்ப்புகள் மிக அதிகளவில் வெளிவருவதற்கு வாசகனின் இந்த எதிர்பார்ப்பும் முக்கியமான காரணமாக இருக்கக்கூடும்.
நிறுவப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளை தொடர்ந்து வாசிக்கும்போது அக்கதைகளின் வடிவமும் பேசு பொருளும் ஓரளவிற்கு யூகித்து விடக்கூடியதாகவே இருக்கிறது. எனவே அவர்கள் கதைகளின் நிகழ்விடத்தையும் காலத்தையும் வாசகன் கணிக்க முடியாதவாறு அடுத்தடுத்த புனைவை உருவாக்க முயல்கிறார்கள். ஆனாலும் தொடர்ந்து வாசிக்கும் வாசகன் அதன் தடத்தையும் உணரமுடியும். இந்த விளையாட்டில் மெல்லிய சலிப்பு வாசகனுக்கு தோன்ற ஆரம்பிக்கும்.
இந்த நிலையில் ஒரு புதிய எழுத்தாளரின் அதுவும் இளம் எழுத்தாளரின் கதைகளை வாசிக்க நேரும்போது ஒரு ஆவலும் எதிர்பார்ப்பும் ஏற்படுவது இயல்பு. இதற்கு காரணம், இதுவரை வாசிக்காத புதிய களங்களும் மொழியும் இருக்கும் என்பதுதான்.
நிதீஷ் கிருஷ்ணாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. இவரது கதைகள் இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. நான் இந்த முன்னுரைக்காக மொத்தமாகத்தான் வாசித்தேன். என் எதிர்பார்ப்பையும் ஆவலையும் பூர்த்தி செய்யும் வண்ணம் இதுவரை நான் வாசித்திராத கதைக் களங்கள் இத்தொகுப்பில் உள்ளன. அக்கதைக் களங்களை அறிந்தபோதே ஒரு வியப்பு எழுந்தது. இப்படியான வாழ்க்கையும் உண்டென்பதையும் இதை கதைகளாக்க முடியும் என்பதையும் உணர்ந்தபோது மெல்லிய சிலிப்பெழுந்தது.
உதாரணமாக "இருநிலை" என்ற கதையில் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் இரு கரைகளில் நிற்கும் காவலர்கள் பற்றிய சித்திரம் வருகிறது. ஒரு நேரத்தில் ஒரு பக்க வண்டி மட்டுமே செல்லக் கூடிய அளவிற்கு உள்ள பாதையில் இருபக்கத்தில் உள்ளவர்கள் தகவலை பகிர்ந்து புரிந்து கொண்டே இந்தப் பணியை செய்ய முடியும். அங்கு பணி புரியும் காவலரின் காதலையும் அதனால் ஏற்படும் மன அவசங்களையும் இக்கதை சொல்கிறது. சிறப்பான கதைக்களம்.
தொழில்நுட்பத் துறை உருவாக்கிய பணியிடங்களும் அவற்றிற்கு அளிக்கப்பட்ட ஊதியமும் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கம் பிரமாண்டமானது. அத்துறையில் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் மன அல்லாடல்களையும் அவர்களின் வாழ்க்கையையும் பேசும் கதைகள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. ஆனாலும் அதிலும் சொல்லப்படாத பல விசயங்கள் உள்ளன என்பதை இத்தொகுப்பிலுள்ள "எஸ்கார்ட்" கதை உணர்த்துகிறது.
இரவுப் பணி புரியும் ஊழியர்களை தங்குமிடங்களுக்கு கொண்டு விடும் வாகனங்களில் பல பெண்களுடன் செல்லும் ஆண் அந்தப் பெண்களுக்கு பாதுகாவலானாக (எஸ்கார்ட்) இருக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறான். பொதுவாக பெண்களுக்கு பாதுகாவலனாக இருப்பதை ஆண் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் ஏற்றுக்கொள்வான் என்றே கருதுவோம். ஆனால் தினமும் அதை கட்டாயமாக செய்யவேண்டும் என்றால் சலிப்பும் வெறுப்பும் வருவது இயல்பு. அந்த ஆணின் உணர்வுகளையும் அதிலிருந்து மீள முயன்று அவன் எதிர்கொள்ளும் வேறொரு சிக்கலையும் "எஸ்கார்ட்" கதை காட்டுகிறது.
நிகழ்த்து கலைகளைப் பற்றிய இரண்டு கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. மிகச்சிறப்பாக நடிப்பவனை ஒதுக்கிவிட்டு சுமாராக நடிப்பவனை முதன்மைக் கதாபாத்திரமாக தேர்வு செய்கிறார் இயக்குதர். ஒதுக்கப்பட்டவன் எடுக்கும் முடிவையும் அதன்பின நிகழ்வனவற்றையும் "தொடரும் நடிப்பு" என்ற கதை சொல்கிறது. நடிப்பு என்பது கைதட்டல்களுக்காகவா அல்லது நடுவர்களுக்காகவா என்ற கேள்வியை எழுப்பி அதற்கொரு பதிலையும் கதைப் போக்கில் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர் நிதீஷ் கிருஷ்ணா.
பேசாமல் நடிக்கும் "மீம்" கலைக்கு பயிற்சி எடுத்தவன் குரலையே முதன்மையாகக் கொண்ட கூத்துக் கலைக்குள் நுழைவதையும் கடைசியில் அக்கலையிலிருந்து விலகும்போது நிசப்தத்தை அடைகிறான் என்பதையும் சொல்கிறது "நிசப்தம்" கதை. இரண்டு கலைகளுக்கான பயிற்சிகளையும் நுட்பமாக விவரிப்பது இக்கதையில் சிறப்பானதாக அமைந்துள்ளது.
சதுரங்க விளையாட்டைப் பற்றிய இரண்டு கதைகள் உள்ளன. கண்களால் பார்க்காமல் காய் நகர்த்தி விளையாடும் முறையில் அமைந்த "அந்த ஒன்று" கதையை என்னளவில் இத்தொகுப்பின் முதன்மைக் கதையாக கருதுகிறேன். துரோணாச்சாரியார் ஏகலைவன் அர்ஜுனன் என்பதான பாத்திர வடிவமைப்பு இக்கதையை வேறு தளத்திற்கு உயர்த்துகிறது. அந்த ஆட்டத்தினை விவரித்துள்ள விதம் நல்ல வாசிப்பின்பத்தை அளித்து இக்கதையை சிறப்பானதாக ஆக்குகிறது.
ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது ஆசிரியரின் ஆதாரக் கேள்வி என்பது முதன்மையான திறனிருப்பவன் ஏன் ஒதுக்கப்படுகிறான் என்பதே என்று எனக்குத் தோன்றுகிறது. அக்கேள்விகளையே வெவ்வேறு விதமாக பெரும்பாலான கதைகளில் கேட்டுப்பார்க்கிறார். பெண்கதாப் பாத்திரங்கள் இரண்டு மட்டுமே உள்ளன என்பது இத்தொகுப்பில் இன்னொரு ஆச்சர்யம். இதுவொரு குறையில்லை, கதைகள் அனைத்துமே ஆண் நோக்கில் விவரிக்கப்படுவது இதற்கு காரணமாக இருக்கலாம்.
பொதுவாக எழுதப்பட்ட பிரதியில் என்ன உள்ளதோ அதைப்பற்றி மட்டுமே பேசவேண்டும். எவையெல்லாம் இல்லை எனப் பேசுவது முறையற்றது என்பதே என் தரப்பு. எனவே இத்தொகுப்பில் என்னளவில் எவையெல்லாம் சிறப்பாக உள்ளன என்பதைப் பற்றி மட்டும் இங்கே தெரிவித்துள்ளேன்.
புதிய கதைக் களங்களுடன் வந்துள்ள எழுத்தாளர் நிதீஷ் கிருஷ்ணனை மகிழ்வோடு வரவேற்கிறேன். மேலும் மேலும் நல்ல படைப்புகளுடன் வரவேண்டுமென வாழ்த்துகிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக