அடிக்குறிப்பிலிருந்து விரியும் வெளி






நூல்

:

காந்தியின் தன் வரலாறு, சத்திய சோதனை ஆய்வுப் பதிப்பு

குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்தில்

:

மகாதேவ் தேசாய்

ஆய்வுப் பதிப்பாசிரியர்

:

திரிதீப் சுஹ்ரூத்

தமிழில்

:

சுனில் கிருஷ்ணன்

பதிப்பகம்

:

காலச்சுவடு







     மகாத்மா காந்தியால் குஜராத்தியில் எழுதப்பட்டு உடனுக்குடன் மகாதேவ் தேசாயால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் "The Experimental of Truth". இதுவே "சத்திய சோதனை" என்ற பெயரில் ரா. வேங்கடராஜுலுவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 1959- ல் வெளிவந்தது. இந்நூல் அநேகம் பேரால் வாசிக்கப்பட்ட ஒன்றாகும்.

மகாதேவ் தேசாயின்  மூல நூலிற்கு விரிவான  ஆய்வுப் பதிப்பை திரிதீப் சுஹ்ரூத் வெளியிட்டார்.  இந்த நூல், "காந்தியின் தன் வரலாறு, சத்திய சோதனை ஆய்வுப் பதிப்பு" என்ற பெயரில் சுனில் கிருஷ்ணன் மொழி பெயர்ப்பில் தற்போது தமிழில் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே இருக்கும் ஒரு நூலிற்கு புதிய மொழிபெயர்ப்பின் தேவையென்ன என்ற கேள்விக்கு முன்னுரையில் சுனில் கிருஷ்ணன் பொருத்தமான காரணங்களைக் கூறுகிறார். இதோடு திரிதீப் சுஹ்ரூத் வெளியிட்ட ஆய்வுப் பதிப்பை மூலநூலாகக் கொண்டு இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது இந்நூலை தனித்துவமிக்கதாக மாற்றுகிறது. 

                நான் ஏற்கனவே சத்திய சோதனை நூலை வாசித்திருந்தபோதும் இந்நூலை வாங்கியதற்கு முக்கியக் காரணம் காந்தியின் குரலை சுனில் கிருஷ்ணனின் மொழியில் கேட்கவேண்டும் என்ற ஆர்வத்தால்தான். காந்தியைப் பற்றி தொடர்ந்து ஊக்கத்துடன் உரையாடிக் கொண்டிருப்பவர்  சுனில் கிருஷ்ணன். இவர் காந்தியின் ஆன்மாவை இன்னும் நெருக்கமாக உணரவைப்பார் என நம்பினேன். அதோடு, இது விரிவான ஆய்வுப் பதிப்பாகவும் அமைந்ததில் கூடுதல் மகிழ்ச்சி.

திரிதீப் சுஹ்ருத்தின்  ஆய்வுப் பதிப்பில் முக்கியமான இரண்டு சிறப்பம்சங்கள் உள்ளன.

1.குஜராத்தியையும் ஆங்கிலத்தையும் ஒப்பிட்டு, குஜராத்தியில் குறிப்பிடப்பட்ட ஒன்று ஆங்கிலத்தில் எப்படி மாறியுள்ளது என்பதைக் குறித்துள்ளார்.

2.மூலநூலில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு நபர்களையும் இடங்களையும் யாரென்றும் எதுவென்றும் விரிவாக அடிக்குறிப்புகள் அளித்துள்ளார்.

இந்த அடிக்குறிப்புகளே இருநூறு பக்கங்கள் உள்ளதாக சுனில் கிருஷ்ணன் குறிப்பிடுகிறார். இந்நூலின் சிறந்த பகுதியாக நான் கருதுவது இந்த அடிக்குறிப்புகளைத்தான்.  இவை ஒவ்வொரு சிறு சொற்களுக்கும் மிகப்பிரமாண்டான விரிந்த தளத்தை அளிக்கின்றன. இந்நூலை வாசிக்கும்போது இந்நூலிற்கு வெளியே இருக்கும் பல்வேறு நுணுக்கங்களையும் தகவல்களையும் அறியமுடிகிறது.

உதாரணமாக 'சர் எட்வின் அர்னால்ட்" மொழி பெயர்த்த 'சாங் ஆப் செலஸ்டியஸ்' வாசித்துக் கொண்டிருந்தார்கள் என  குறிப்பிட்டு காந்தி அடுத்த விசயத்திற்கு செல்கிறார். அந்த நபருக்கான அடிக்குறிப்பில் "சர் எட்வின் அர்னால்ட் (1832 - 1904): ஆங்கிலக் கவி, பத்திரிக்கையாளர், அவர் பூனா அரசு சமஸ்கிருத கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார் (1856- 61). அவரது பிற முக்கியமான ஆக்கங்கள் என 'The Light of Asia', 'The Great Renunciation'(1879) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 'The Song of Celestial' 1885 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  The Song of Celestial என்பது சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பகவத்கீதை. இதை வாசித்தவுடன் ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. ஆசியஜோதி என கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டு நமது பாடநூல்களில் இடம்பெற்ற நூலின் மூலநூல் சர் எட்வின் அர்னால்டால் எழுதப்பட்டது என்பதையும் காந்தி கீதையை இவரின் மொழியாக்கத்தின் மூலம்தான் முதலில் அறிந்தார் என்பதும்தான் அந்தப் பிரமிப்பிற்கு காரணம்.

இது மிகச் சிறிய உதாரணம்தான். காந்தி ஒரு உணவகத்திற்கு சென்றேன் எனக் குறிப்பிட்டிருந்தால் அந்த உணவகத்தின் பெயர், அதன் முகவரி மற்றும் தேதியையும் அடிக்குறிப்பில் அளித்துள்ளார். ஒவ்வொரு அடிக்குறிப்பை வாசிக்கும்போதும் திரிதீப் சுஹ்ருத்தின் கடும் உழைப்பினை உணர முடியும்.

இந்நூலின் அடிக்குறிப்புகள் ஒரு தனிமனிதரின் வாழ்க்கை அப்போதைய காலகட்டத்தின் கதையாக விரிந்து பரவுகிறது.  ரா. வேங்கடராஜுலுவின் "சத்திய சோதனை' நூலில் வெறும் பெயர்களாக கவனத்தில் தங்காமல் நழுவுச் சென்றவர்கள் தற்போது பெரும் ஆளுமைகளாக உயர்ந்து நிற்கிறார்கள். இது, நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் பெரும் உற்சாகத்துடன் வாசிக்க வைக்கிறது.

சுனில் கிருஷ்ணனின் மொழி பெயர்ப்பு நவீன புனைவு மொழியில் உள்ளதால் நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அதற்கு முந்தைய நிகழ்வுகளின் விவரிப்பை நிகழ்காலத்தில் நடப்பதைப் போலவே உணர வைக்கிறது. ஏற்கனவே வாசித்த நூலை இன்னும் துலக்கமாக காணவும் அணுக்கமாக நெருங்கவும் முடிகிறது. ஐந்து ஆண்டுகளை இந்நூலிற்காக செலவிட்டுள்ளார் என்பது சுனில் கிருஷ்ணனின் காந்தியின் மீதான அன்பையும் அவருக்காக இவர் அளித்த அர்ப்பணிப்பையும் உணர்த்துகிறது.

காந்தி தன் மனதின் உள்குரல் கேட்ட தருணங்களை மட்டுமே இந்நூலில் கூறுவதாகக் குறிப்பிடுகிறார். அவர் சராசரி இந்தியக் குடிமகனாக பிறந்து எவ்வாறு தன் உள்குரலின் வழிகாட்டலில் மகாத்மா என மக்களால் அழைக்கப்படுமளவிற்கு உயர்ந்தார் என்பதை இந்நூல் காட்டுகிறது. திகைத்து நிற்க வைக்கும்  ஒவ்வொரு இக்கட்டின் போதும் உள் குரலின் வார்த்தைக்கு செவி கொடுப்பதும் அதன் கட்டளைக்குப் பணிவதுமே காந்தியின் செயலாக உள்ளது. சில காரியங்கள் மனிதனின் கணிப்பிற்கு அப்பாற்பட்டவை. எடுக்கும் முடிவுகள் சுயநலமின்றி இருந்தால் அவற்றை இறைவனே நடத்தி வைப்பான் என நம்புகிறார்.  நூலை வாசிக்கவிருப்பவர்களின்  வாசித்து பரவசமடையும் உணர்வை மங்கச் செய்துவிடும் என்பதால் நூலில் உள்ளதைக் கூறாமல் தவிர்க்கிறேன்.

     நூலிற்கு நடுவில் "தென்னாப்ரிக்கா சத்தியாகிரகம்" என்ற நூலை வாசித்து விட்டு தொடர்ந்து வாசிக்குமாறு  வாசகர்களை காந்தி கேட்டுக் கொள்கிறார். நான் அந்நூலை வாசித்ததில்லை என்ற போதிலும் ராமச்சந்திர குஹா எழுதிய "தென்னாப்பிரிக்காவில் காந்தி" நூலை வாசித்திருந்ததால் தொடர்ந்து வாசிக்க முடிந்தது. இதை வாசிக்காதவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கக்கூடும். நூலின் அடிக்குறிப்புகளில் ஏராளமான நூல்கள் சுட்டப்பட்டுள்ளன. அந்நூல்களை வாசிப்பதற்கு வாழ்நாள் போதாதென்ற எண்ணத்தால் அயர்ச்சி தோன்றுவதும் உண்மை.

இந்தியாவின் மகாத்மாவாக இன்றும் விளங்கிக் கொண்டிருக்கும் காந்தி இக்கட்டான தருணங்களில் எப்படிச் சிந்தித்தார்  என்பதையும் அவரது முக்கியமான எல்லா முடிவுகளையும் எப்படி எடுத்தார் என்பதையும் உணர்ந்து கொள்ள இந்நூல் உதவும். காந்தியை ஏற்கும் தரப்பினர் இந்நூலை  வாசிப்பதன் மூலம் இன்னும் அணுக்கமாக அவரை உணரலாம். அவரை ஏற்காத தரப்பினர் இதை வாசித்தால் தங்கள் தரப்பில் தொடர வேண்டுமா என்பதை யோசிப்பார்கள்.

இறுதியாக ஒன்று, காந்தி எழுதும்போதே தன் மனக்குரலை தான் உணர்ந்த, கேட்ட தருணங்களை பகிர்ந்து கொள்ளவே எழுதுவதாகக் குறிப்பிட்டு "சத்தியத்துடனான எனது சோதனைகளின் கதை" எனத் தலைப்பிட்டே எழுதியுள்ளார். அதுவும், காந்தி பிறந்ததிலிருந்து 1921- ஆண்டு வரையிலான நிகழ்வுகள் மட்டுமே நூலில் இடம் பெற்றுள்ளது. மேலும், "தென்னாப்ரிக்கா சத்தியாகிரகம்" நூலில் உள்ள பெரும்பாலான விவரங்களை இந்நூலில் அளிக்கவில்லை. இந்நிலையில் இந்நூலிற்கு "காந்தியின் தன் வரலாறு" எனப் பெயரிட்டது வாசகனை ஏமாற்றும் முயற்சியாகவே நான் கருதுகிறேன். "சத்திய சோதனை" நூலைப் பற்றி அறியாத இளம் வாசகர்கள் காந்தியின் முழு வரலாறு என நம்பி வாங்கி ஏமாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே உள்ள தலைப்பை இப்படி மாற்றுவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று கருதுகிறேன்.

   கம்பராமாயணம் மற்றும் வெண்முரசோடு இந்நூலும் என் வாழ்நாளெல்லாம் உடனிருக்கும் என நம்புகிறேன்.

சிறப்பாக மொழி பெயர்த்துள்ள சுனில் கிருஷ்ணனுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

களிறன்ன நறுமாமலர்

ஆழ்ந்ததால் திரண்டவை

கோர்க்கப்பட்ட பட்டயங்கள்