கனக்கணம்
கனக்கணம்
பல நாட்கள்
பல நூறு மணிகள்
பல்லாயிரம் நிமிடங்கள்
பல கோடி கணங்களை கடந்தாயிற்று...
கடைசி ஒரு கணம்
ஒரே ஒரு கணம் எஞ்சியுள்ளது
கடக்கவே முடியாத எடையுடன்
இதுவரை கடந்துவந்த அத்தனை கணங்களின் கனத்தையும்
தன்னுள் ஒருக்கிக்கொண்டு
மாபெரும் பனிமலை போர்வையென உடலை இறுக்குகிறது
எலும்புகள் கிட்டித்து நொறுங்க ஆயத்தமாகின்றன
மனதிடம் மன்றாடுகிறேன்
ஒரு கணம்தான்...
கனக்கனமானாலும் ஒரே ஒரு கணம்
தாங்கிவிடு தாங்கிவிடென...
அந்த அந்தகக் கணம் முடியுமுன்னே
பனிமலைப் போர்வை ஆவியாய் மறைந்தது
அவள் விழிக் கூர்முனையின் துளியின் துளியில் கசிந்த
விகசிப்பின் வெம்மையில்

கருத்துகள்
கருத்துரையிடுக